Monthly Archives: November 2011

சொரிமுத்தைய்யனார் திருக்கோயில், காரையார்

அருள்மிகு சொரிமுத்தைய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 250 209

காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொரிமுத்தைய்யனார், மகாலிங்கம்
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் பாணதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரையார்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக மூலாதாரம் என்று சொல்லப்படும் அளவிற்கு கோயில் இது. பொதிகை மலை மீது அமைந்த கோயில் இது.
கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, இலிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த இலிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு இலிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே பிற்காலத்தில் தர்மசாஸ்தாவும், சொரிமுத்தைய்யனாராக எழுந்தருளினார். இவர் இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலைத் தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவரது சன்னதியில் சப்தகன்னியர்களும் இருப்பது விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். எதிரே நந்தி, யானை, குதிரை வாகனங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருக்கிறது.

சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி

அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமேஸ்வரர்
அம்மன் சவுந்தரவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நங்கவள்ளி
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் தொட்டிநங்கைஎன்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கிப் பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவக் கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் எப்படி வந்தது என யோசித்தவள், அதை வெளியே எறிந்துவிட்டாள். சற்று தூரம் நடந்தபோது மீண்டும் கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது கல் கூடைக்குள் இருந்தது. ஞாபக மறதியாக மீண்டும் கூடையிலேயே வைத்திருக்கலாம் என்ற நினைப்பில் எறிந்துவிட்டு நடந்தாள். ஆனால் மீண்டும் கூடை கனக்கவே, பயந்துபோன அவள் கூடையோடு அதை ஒரு குளத்தில் எறிந்துவிட்டாள். அதன்பிறகு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு அருள் வந்து, தூக்கி எறியப்பட்ட அந்தக்கல் லட்சுமியின் வடிவத்தைக் கொண்டது எனக் கூறினாள். ஊர்மக்கள் அந்த கல்லைத் தேடி எடுத்து பார்த்தபோது, பாம்பு புற்றுடன் இலட்சுமிவடிவக் கல்லை கண்டனர். அதன்பிறகு கீற்று ஓலைகளால் பந்தல் அமைத்து வழிபட்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் இந்த கோயிலை விருத்தி செய்தனர். பெரிய கோயிலாக கட்டப்பட்டது. இந்த கோயில் ரெட்டியார், தேவாங்கர், வன்னியகுல சத்திரியர், நாயக்கர் சமுதாய மக்களுக்கு குலதெய்வ கோயிலாக விளங்குகிறது.