Monthly Archives: November 2011

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம்

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம் (பஞ்சுப்பேட்டை), காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 98944 43108 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

மூலவர் ஓணகாந்தேஸ்வரர்
அம்மன் காமாட்சி
தல விருட்சம் வன்னியும், புளியமரமும்
தீர்த்தம் ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவோணகாந்தன் தளி
ஊர் ஓணகாந்தன்தளி
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த இலிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.

இதே போல் காந்தனும் மற்றொரு இலிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று இலிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும், இலிங்கங்களுக்குப் பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன், பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், இன்னும் சில பாடல்கள் பாடட்டுமே எனத் தாமதம் செய்து, பின்னர் அருகில் இருந்த புளியமரம் ஒன்றைக் காட்டி மறைந்தார். அம்மரத்திலுள்ள காய்களெல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு, பொன் காய்களாக மாறின. பின்னர் இலிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார்.

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் (பிள்ளையார்பாளையம்), காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 98653 – 55572, +91- 99945 – 85006

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமேற்றளீஸ்வரர், ஓதவுருகீஸ்வரர் (மற்றோர் மூலவர்)
உற்சவர் சந்திரசேகர்
அம்மன் பராசக்தி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கச்சிமேற்றளி
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், அப்பர்

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு, சிவனின் இலிங்க வடிவம் பெறவேண்டும் என்ற ஆசை எழுந்தது. எனவே, சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனோ, இது சாத்தியப்படாது என சொல்லி ஒதுங்கிக் கொண்டார். விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டித் தவம் செய்யத் தொடங்கினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன், அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார். அவரிடம், இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி, தவம் செய்து வழிபட்டு வர இலிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு, தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவதல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர், இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு, அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு, இலிங்க வடிவம் பெற்றபோது, சம்பந்தர் பாடலை முடித்தார். எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் இலிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர், “ஓதஉருகீஸ்வரர்என்ற பெயர் பெற்றார்.

காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு காமாட்சியே பிரதான அம்பாளாக கருதப்படுவதால் இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் அம்பாள் இருப்பதில்லை. ஆனால், இங்கு பராசக்தி அம்பாள் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அருள்புரிகிறாள். இவள் சாந்தமான கோலத்தில் இருப்பது சிறப்பு. சிவன் மேற்கு நோக்கி இருப்பதால் இவருக்கு மேற்றளீஸ்வரர்” (மேற்கு பார்த்த தளி) என்ற பெயர் வந்தது. தளி என்றால் கோயில்என்று பொருள் உண்டு. ஓதவுருகீஸ்வரர் கருவறையில் சிவ வடிவான இலிங்கத்தையும், அருகே திருமாலின் பாதத்தையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதால் வாழ்க்கையில் குறைவிலாத வளம்பெறலாம் என்பது நம்பிக்கை.