அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம்

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, காஞ்சிபுரம் (பஞ்சுப்பேட்டை), காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 98944 43108 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

மூலவர் ஓணகாந்தேஸ்வரர்
அம்மன் காமாட்சி
தல விருட்சம் வன்னியும், புளியமரமும்
தீர்த்தம் ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவோணகாந்தன் தளி
ஊர் ஓணகாந்தன்தளி
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த இலிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.

இதே போல் காந்தனும் மற்றொரு இலிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார். மூன்று இலிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும், இலிங்கங்களுக்குப் பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன், பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், இன்னும் சில பாடல்கள் பாடட்டுமே எனத் தாமதம் செய்து, பின்னர் அருகில் இருந்த புளியமரம் ஒன்றைக் காட்டி மறைந்தார். அம்மரத்திலுள்ள காய்களெல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு, பொன் காய்களாக மாறின. பின்னர் இலிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார்.

இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார். சுந்தரர் இந்த தலத்தில் அருளிய பக்திப் பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது. இதைப் பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று இலிங்கங்களும் மூன்று பிரதான சன்னதிகளில் உள்ளது. ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் ஆகியோர் இவர்கள்.

இது காணக்கிடைக்காத தரிசனம். அர்த்த மண்டபத்தில் சுந்தரரும், இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது. இங்குள்ள வயிறுதாரி விநாயகர் கேட்ட வரம் அருளுபவர். இதுதவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ஓம்என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு. காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இந்நகரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது. ஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும், இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ள ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.

தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களுள் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும்.

தேவாரப்பதிகம்:

நெய்யும்பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார் கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழலடி தொழுது உய்யின் அல்லால் ஐவர் கொண்டிங்கு ஆட்டஆடி ஆழ்குழிப்பட்ட அழுத்து வேனுக்கு உய்யு மாறொன்று அருளிச் செய்வீர் ஓண காந்தன் தளியுளீரே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 3வது தலம்.

திருவிழா மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி.

பிரார்த்தனை:

பொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கும் பொருளுதவி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *