Monthly Archives: June 2011

அருள்மிகு புல்வநாயகி திருக்கோயில், பாகனேரி

அருள்மிகு புல்வநாயகி திருக்கோயில், பாகனேரி, சிவகங்கை மாவட்டம்.
*********************************************************************************

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் புல்வநாயகி
தல விருட்சம் நெய் கொட்டா மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் பாகனேரி
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தின் பலனால் பூலோகத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை அழித்து, தங்களைக் காக்கும்படி மக்கள் சிவனை வழிபட்டனர். சிவன், அம்பிகை மூலமாக அவனை அழிக்க ஒரு தந்திரம் செய்தார். அப்போது, அம்பிகை விளையாட்டாக சிவனின் கண்களை மூட, அவர் சினமுற்று அம்பிகையை பூவுலகில் பிறக்கச் செய்தார். இங்கு வந்த அம்பிகை அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து, மாயையாக போர் புரிந்தான். ஒருகட்டத்தில் அவன், புல் வடிவம் எடுத்தான். அப்போது, அம்பிகை மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து, அவனை அழித்தாள். இவ்வேளையில் புதிய மானைக் கண்ட மக்கள் அதை நெருங்கினர். அம்பிகை ஓடிச்சென்று, ஓரிடத்தில் பூமிக்குள் புகுந்து கொண்டாள். மக்கள் அங்கு தோண்டியபோது, அம்பாளின் சிலை வடிவம் இருந்தது. மகிழ்ந்த மக்கள் அச்சிலையை இங்கு பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர். புல்வநாயகி என்றே பெயர் சூட்டினர்.

கோபுரத்தில் ஆன்மிகத்தை வளர்த்த விவேகானந்தர், சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட மகாத்மா காந்திஜி, காதலில் புதிய சரித்திரம் படைத்த ரோமியோ, ஜூலியட், சினிமாவில் காதலை வளர்த்த தியாகராஜ பாகவதர், ராஜகுமாரி சிலைகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே கோபுரத்தின் கீழே கைந்தவக்கால கணபதி சன்னதி உள்ளது. கோபுரத்தின் கீழே, இக்கோயிலின் தேரில் இருந்த சிலைகளைப் பிரதிட்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் பைரவர், முனீசுவரர், சனீசுவரர் உள்ளனர்.

அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர்

அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர், அண்ணாமலை புரம், திருச்சி.
***********************************************************************************************

காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூங்காளியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தென்னூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

அன்னை காளி, அமைதியே உருவாகக் காட்சிதரும் கோயில் ஒன்று, மலைக்கோட்டை மாநகரில் தில்லைநகர், தென்னூர், புத்தூர், உறையூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. வெகு ஆண்டுகளுக்கு முன்னர், பூந்தோட்டமாகத் திகழ்ந்த இவ்விடத்தில், அம்மன் எழுந்தருளியதாலும் சாத்வீகமாகத் திகழ்வதாலும் பூங்காளி என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். இருள் போக்கும் ஒளியாகத் திகழும் தேவி பூங்காளி அம்மனாக புன்னகை தவழும் முகத்துடன் இங்கே அருள் புரிகின்றாள்.

கோபுர வாயிலைத் தாண்டியதும், மகா மண்டபம் உள்ளது. கருவறைக்கு இடதுபுறம் பாலகணபதி அருள்பாலிக்கின்றார். கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு திகழ்கின்றாள். இவளை தரிசிக்கும்போதே நம்மனதில் உள்ள கவலைகள் யாவும் அகன்று விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.