Category Archives: தேனி

அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம்

அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.

+91- 99409 94548 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வெள்ளியன்று முழு நேரம் கோயில் திறந்திருக்கும்.

மூலவர் பாறையடி முத்துக்கருப்பணர் (பாறையடி முத்தையா)
தீர்த்தம் பாறைடி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் உத்தமபாளையம்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இந்த சிவனைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்தருளினார். காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனது. பின்னர், முத்துக்கருப்பண்ணரே பிரசித்தி பெற்றுவிட்டார். இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர், “பாறையடி முத்தையாஎன்று அழைக்கப்படுகிறார்.

மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, “ஐயாஎன்று அழைக்கிறார்கள்.

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி, தேனி மாவட்டம்.

தேனியில் இருந்து 5 கி.மீ., தூரம் மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சித்திரை முதல் தேதியில் இங்கு திருவிழா கோலாகலமாக நடக்கும். சிவ அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சுவாமி கருவறைக்கு மேற்கூரை கிடையாது. சுயம்பு தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே உகந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளை இலகுவாக போட முடியாததைக் கொண்டு சுயம்பு வளர்ச்சியை அறியலாம். கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதற்கு பரிகாரமாக கோயிலுக்குத் தேவைப்படும் பொருட்களை பக்தர்கள் தந்து மகிழ்கின்றனர். பலருடைய வாழ்வில் ஏற்பட்ட போராட்டங்கள், சிக்கல்கள் நீங்கியுள்ளதால் வாழ்க்கை குறை நீக்கும் தலமாக இப்பகுதியினரால் வணங்கப்படுகிறது.