அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி

அருள்மிகு வீரப்ப அய்யனார் திருக்கோயில், தேனி, தேனி மாவட்டம்.

தேனியில் இருந்து 5 கி.மீ., தூரம் மலையடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் வீரப்ப அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சித்திரை முதல் தேதியில் இங்கு திருவிழா கோலாகலமாக நடக்கும். சிவ அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சுவாமி கருவறைக்கு மேற்கூரை கிடையாது. சுயம்பு தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே உகந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கிரீடம், ஒட்டியாணம் போன்றவைகளை இலகுவாக போட முடியாததைக் கொண்டு சுயம்பு வளர்ச்சியை அறியலாம். கோயில் வளாகத்தில் குறி சொல்வது பிரபலமாக கருதப்படுகிறது. மனதில் உள்ள குறைகள், ஆதங்கங்கள், தவறுகள் போன்றவைகளை உருக்கமாக வேண்டிக் கொண்டால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதற்கு பரிகாரமாக கோயிலுக்குத் தேவைப்படும் பொருட்களை பக்தர்கள் தந்து மகிழ்கின்றனர். பலருடைய வாழ்வில் ஏற்பட்ட போராட்டங்கள், சிக்கல்கள் நீங்கியுள்ளதால் வாழ்க்கை குறை நீக்கும் தலமாக இப்பகுதியினரால் வணங்கப்படுகிறது.

வீரப்ப அய்யனாருக்கு உகந்த மலர் மல்லிகை. பிடித்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். ஆடு உள்ளிட்ட பலிகள் இங்கு ஏற்றுக் கொள்வதில்லை. அருகில் உள்ள கருப்பசாமி கோயிலிலே இது போன்ற நடைமுறைகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *