Category Archives: தேனி

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம், தேனி மாவட்டம்.

+91- 4546- 231818, 98423 36548

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள் (வேலங்காட்டுபெருமாள்)

உற்சவர்

வரதராஜர்

தாயார்

பெருந்தேவி

ஆகமம்

வைகானசம்

தீர்த்தம்

வராகநதி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

குழந்தை மாநகர்

ஊர்

பெரியகுளம்

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை வடநாட்டில் மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மக்களின் ஒரு பகுதியினர் பெரியகுளம் பகுதிக்கு வந்து வராகநதியின் கரையில் வீடுகள் அமைத்து தங்கினர். அவர்கள் இனிமேலும் தாங்கள் பஞ்சத்தில் சிரமப்படக்கூடாது எனப் பெருமாளை வேண்டினர். அத்துடன் அங்கிருந்த மக்கள் இணைந்து ஓர் ஆலமரத்தின் பக்கத்தில் பெருமாளின் சிலை மட்டும் வடித்து வழிபட்டனர். அதன்பின்பு மன்னர்கள் காலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவியை பிரதிஷ்டை செய்து, பெரியநாயகிக்கும் தனியே சன்னதியுடன் கோயில் எழுப்பி வழிபட்டு வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

சுவாமிக்கு வடப்புறத்தில் வீர ஆஞ்சநேயர் தெற்கு நோக்கியபடி, கால்கள் கிழக்கே திரும்பியிருக்க நின்ற கோலத்தில், வலக்கையைத் தூக்கியபடி, இடது கையில் பூச்செண்டுடன் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. பாண்டிய மன்னர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலில் தாயார் சன்னதிக்கு முன்பு உள்ள தூணில் விநாயகரின் உருவமும், பிற தூண்களில் ஏனைய சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் தானமாக வழங்கப்படும் நெல்மணி மற்றும் விதைகளை விதைப்பதால் விவசாயம் செழிக்கிறது என முதிர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர். மூலஸ்தானத்தின் எதிரே தீப ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தின் முன்பு பிறந்த குழந்தைகளை வைத்து பழங்களை நைவேத்யமாகப் படைத்து பூஜிக்க குழந்தையின் வாழ்வு சிறக்கும் என நம்பப்படுகிறது. இதனால் இங்கு எப்போதும் அதிகமான குழந்தை பக்தர்களைக் காணமுடிகிறது.

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், சுருளிமலை

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில், சுருளிமலை, தேனி மாவட்டம்.

+91- 4554- 276715 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பூதநாராயணன்

தல விருட்சம்

புலிச்சிமரம்

தீர்த்தம்

சுரபிநதி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சுருதிமலை

ஊர்

சுருளிமலை

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்த இராவணேஸ்வரன் ஈரேழு உலகம், அண்டசராசரங்கள், நவக்கிரகங்கள், 12 ராசிகள், 27நட்சத்திரங்கள், தேவர்கள் ஆகியோர் தனக்கு கீழே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் பலனால் அவன், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். இராவணனின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட எண்ணி பாதிக்கப்பட்ட அனைவரும் யாவரது கண்களுக்கும் புலப்படாமல் ககனமார்க்கமாக சென்று, மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, தேவர்களைக் காணாத இராவணன் சனி பகவானை அனுப்பி அவர்களைக் கண்டறிந்து வரும்படி பணித்தான். அது முடியாமல் போனதால் நாரதரிடம், தேவர்களின் மறைவிடத்தை கண்டறியும்படி அவருக்கு ஆணையிட்டான். அப்படி தேடி வரும் போது ஒரு புற்றின் நடுவே மகரிஷி தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். நாரதர் அவரிடம் தேவர்கள் இருப்பிடம் பற்றி கேட்க, அவர் தேவர்கள் ஆலோசனை நடத்தும் இடத்தைக் கூறினார். நாரதர் மூலமாக இச்செய்தியை அறிந்து கொண்ட இராவணேஸ்வரன், கடுங்கோபம் கொண்டு தேவர்களை அழிக்க தனது அரக்கர் படையுடன் புறப்பட்டான். அவனிடமிருந்து தேவர்களைக்காக்கும் பொருட்டு மகாவிஷ்ணு, மகரிஷி தவம் செய்த இடத்தில், பஞ்சபூதங்களின் மொத்த வடிவில், பூதசொரூபத்துடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நின்றார். அவரது பூதகோலத்தைக் கண்டு பயந்த இராவணன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். அப்போது இரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு, அவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பூத நாராயணனாக உக்கிரத்துடன் இருந்த மகாவிஷ்ணுவிற்கு அன்னம் படைக்க, அதனை உண்ட அவர் தனது விஸ்வரூபத்தை அடக்கி ஒளிமயமாக காட்சியளித்தார். இவ்வாறு தேவர்களுக்கு பூதநாராயணனாக காட்சி தந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் வீற்றுள்ளார்.