அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம், தேனி மாவட்டம்.

+91- 4546- 231818, 98423 36548

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வரதராஜப்பெருமாள் (வேலங்காட்டுபெருமாள்)

உற்சவர்

வரதராஜர்

தாயார்

பெருந்தேவி

ஆகமம்

வைகானசம்

தீர்த்தம்

வராகநதி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

குழந்தை மாநகர்

ஊர்

பெரியகுளம்

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை வடநாட்டில் மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மக்களின் ஒரு பகுதியினர் பெரியகுளம் பகுதிக்கு வந்து வராகநதியின் கரையில் வீடுகள் அமைத்து தங்கினர். அவர்கள் இனிமேலும் தாங்கள் பஞ்சத்தில் சிரமப்படக்கூடாது எனப் பெருமாளை வேண்டினர். அத்துடன் அங்கிருந்த மக்கள் இணைந்து ஓர் ஆலமரத்தின் பக்கத்தில் பெருமாளின் சிலை மட்டும் வடித்து வழிபட்டனர். அதன்பின்பு மன்னர்கள் காலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவியை பிரதிஷ்டை செய்து, பெரியநாயகிக்கும் தனியே சன்னதியுடன் கோயில் எழுப்பி வழிபட்டு வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

சுவாமிக்கு வடப்புறத்தில் வீர ஆஞ்சநேயர் தெற்கு நோக்கியபடி, கால்கள் கிழக்கே திரும்பியிருக்க நின்ற கோலத்தில், வலக்கையைத் தூக்கியபடி, இடது கையில் பூச்செண்டுடன் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. பாண்டிய மன்னர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலில் தாயார் சன்னதிக்கு முன்பு உள்ள தூணில் விநாயகரின் உருவமும், பிற தூண்களில் ஏனைய சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் தானமாக வழங்கப்படும் நெல்மணி மற்றும் விதைகளை விதைப்பதால் விவசாயம் செழிக்கிறது என முதிர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர். மூலஸ்தானத்தின் எதிரே தீப ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தின் முன்பு பிறந்த குழந்தைகளை வைத்து பழங்களை நைவேத்யமாகப் படைத்து பூஜிக்க குழந்தையின் வாழ்வு சிறக்கும் என நம்பப்படுகிறது. இதனால் இங்கு எப்போதும் அதிகமான குழந்தை பக்தர்களைக் காணமுடிகிறது.

வரதராஜருக்கு தென்புறம் பெரியநாயகியும், வீரஆஞ்சநேயரும் தனிச்சன்னதியில் காட்சியளிக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நவக்கிரகம், சேனை முதல்வர், தும்பிக்கையாழ்வார், உடையவர் நம்மாழ்வார், நாகராஜர், துவாரபாலகர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆனந்த விமானம் எனப்படும். இறைவனுக்கு நைவேத்யமாக வெண்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். இத்தல விநாயகர் செல்வ சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் வரதராஜப்பெருமாள், திருப்பதியில் காட்சிதரும் வெங்கடாஜலபதியின் அம்சத்துடன் வராகநதியின் தென்கரையில் ஏழு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

திருவிழா:

தினமும் இருகால பூஜைகள் நடத்தப்படும் இங்கு சித்ரா பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி உற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, ஹனுமன் ஜெயந்தி, தைப்பூச திருபவித்ர உற்சவம், கணுப்பொங்கல் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

கோரிக்கைகள்:

இத்தலத்தில் வணங்கிக் கொள்ள வேண்டிய வரம் கிடைக்கிறது, கல்யாண பாக்கியம் கிட்டும், மாங்கல்யம் நீடிக்கும், குடும்பம் அபிவிருத்தி அடையும், ஆயுள் நீளும்,சகல காரியங்களும் வெற்றி பெறும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

எண்ணிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு 48 நாட்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வெள்ளைப்பூ மாலை, வெண்ணெய், நெய் வடை மாலை சாத்தப்படுகிறது. மாங்கல்ய பலன் பெருக தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *