Category Archives: சிவ ஆலயங்கள்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நாகேஸ்வரசுவாமி

தாயார்

கோவர்த்தனாம்பிகை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கொடுவாய்

மாவட்டம்

திருப்பூர்

மாநிலம்

தமிழ்நாடு

சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு பக்தி வைத்திருந்தான். அனுதினமும் ஆலயம் சென்று ஏகாம்பரநாதரை வணங்கி, தனக்குப் பார்வை அருள வேண்டும் என வேண்டி வந்தான். ஒரு நாள் அவன் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட ஏகாம்பரநாதர், ஒரு கண்ணில் மட்டும் பார்வையை வழங்கினார். மகிழ்ந்த அவன், “மற்றொரு கண்ணுக்கு நான் எவ்விடம் போவேன்?” என்று கேட்டான். இறைவன் கொங்குநாடு சென்று அங்குள்ள கொடுவாய் எனும் சேத்திரத்தில் கோவர்த்தனாம்பிகையுடன் நாகேஸ்வரராக அருளும் எம்மை வணங்கினால் கண் பார்வை கிடைக்கும் என்றருளினார். இளைஞனும் அவ்வாறே கொங்குநாடு வந்து கொடுவாய் தலத்தில் வேண்ட, அவனுக்குப் பார்வை கிடைத்ததாக கர்ணபரம்பரை செய்தி ஒன்று கூறுகிறது.

சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். முன்புறம் மயில் வாகனம் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் முல்லை, அரளி, நந்தியாவட்டை மலர்கள் நிறைந்த தோட்டம் பசுமை விரித்திருக்கிறது. சிறிய செயற்கைக் குளத்தின் நடுவில் லட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்த நிலையில் சுதைவடிவாக உள்ளனர். ஏறக்குறைய ஏழடி உயரத்திற்கு பரந்து விரிந்து ஒரு புற்று உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இது இராகு, கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது.

அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருக்காமீஸ்வரர்

தாயார்

சாந்த நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பொன்னூர்

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார். அவரது தோஷம் நீங்க அருளிய சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. பிரம்மனுக்கு பொன்னன் என்ற திருநாமமும் உண்டு. பொன்னன் எனக் கூறப்படும் பிரம்மன் வழிபட்டதன் காரணத்தால் இத்தலம் பொன்னன் ஊர் என்றிருந்து, மருவி பொன்னூரானது. பிரம்மன் வழிபட்ட காரணத்தினால் இத்தல இறைவனுக்கு பிரம்மேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி சுந்தரமூர்த்தி சுவாமிகளால் வைப்புத்தலமாக போற்றப்பட்ட சிறப்புடையது. சுந்தரரும் பொன்னார் நாட்டுப் பொன்னார் என இப்பகுதியைப் போற்றுகின்றனர். பராசர முனிவர் இங்கு தவமிருந்து இத்தல பெருமானை பூஜித்து, பேறு பெற்றுள்ளார். சிவன் சன்னதியும் அம்பிகை சன்னதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டு அமைந்துள்ளதால் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னதி தென்முகமாகவும் உள்ளது.