Category Archives: பாடல் பெறாதவை

சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் , உவரி, திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுயம்புநாதர்
அம்மன் பிரம்பசக்தி
தல விருட்சம் கடம்பமரம்
தீர்த்தம் தெப்பகுளம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வீரைவளநாடு
ஊர் உவரி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

அருகில் உள்ள கூட்டப்பனையிலிருந்து ஒருவர் பால் விற்க தினமும் உவரி வழியாக செல்லும் போது, தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வரும் போது, கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை வெட்டி வீழ்த்திய போது இரத்தம் பீறிட்டது. இறைவனும் அசரீரியாக, தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் சொல்ல பனை ஒலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டது. சுவாமியை வழிபட்டால் கூன், குஷ்டம் ஆகிய நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று இலிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு இலிங்கோத்பவராக உள்ளார்.

சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம்

அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம், தர்மபுரி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுயம்புலிங்கேஸ்வரர்
ஊர் அமானிமல்லாபுரம்
மாவட்டம் தர்மபுரி
மாநிலம் தமிழ்நாடு

1860ம் ஆண்டில் இப்பகுதியில் வசித்த சின்னவேடி செட்டியார் என்பவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, “இங்குள்ள தோப்பில் இலிங்கம் ஒன்று இருக்கிறது. அதை வைத்து எனக்கு கோயில் கட்டு. இப்பகுதியை சிறப்பாக பாதுகாப்பேன்என உத்தரவிட்டார். பதறி எழுந்த செட்டியார் மறுநாளே கோயில் கட்டுவதற்கான பணிகளைத் துவங்கினார். அவருக்குரிய தென்னந்தோப்பில் இறைவனைத் தேடி அலைந்தார். இலிங்கத்தைக் காணவில்லை. பிறகு ஒரு புளியமரத்தடிக்கு சென்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். என்ன செய்யலாம் என யோசனை செய்துகொண்டே ஒரு குச்சியால் எதேச்சையாக மண்ணை கிளறிக் கொண்டிருந்தார். அப்போது குச்சியில் ஏதோ தட்டுப்பட இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் மேலும் தோண்டிப் பார்த்தார். உள்ளே இலிங்கம் ஒன்று இருந்தது.