Monthly Archives: March 2012

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை

அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

காலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வீர அழகர் (சுந்தர்ராஜப்பெருமாள்)

தாயார்

சவுந்தரவல்லி என்ற மகாலட்சுமி

ஆகமம்

பாஞ்சராத்ரம்

தீர்த்தம்

அலங்கார தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

வானரவீர மதுரை

ஊர்

மானாமதுரை

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள மூலவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள். இத்திருக்கோயிலை மாவலி வாணாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மாவலி வாணாதிராயருக்கு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்த மன்னருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. இந்த பெருமாளைப் பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். இந்நிலையில் ஒரு நாள் மன்னருக்கு சுந்தர்ராஜபெருமாளைப் பார்க்கச் செல்ல இயலாத அளவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளைப் பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார். உடனே பெருமாள், மன்னரின் கனவில் தோன்றி, “மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்எனக் கூறி மறைந்தார். மன்னனும் பெருமாள் கூறியபடி கோயில் கட்ட நினைத்தான். ஆனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவது என குழம்பினான். பெருமாள் மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விட, அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோயிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோயிலுக்கான குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவேதான் கோயிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கண்ணுடைய நாயகி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

நாட்டரசன்கோட்டை

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும்போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. அவற்றை விற்க முடியாமல் அனைவரும் கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். நீண்ட நாட்கள் கிராமங்களில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பின்னர் சிவகங்கை மன்னரிடம் பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்தனர். மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, “நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன்எனக் கோடிட்டு காண்பித்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், “கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்என போற்றப்பட்டது.