Monthly Archives: March 2012

அருள்மிகு பாலாம்பிகா சமேத சங்கர நாராயண சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பாலாம்பிகா சமேத சங்கர நாராயண சுவாமி திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சங்கர நாராயணர்

தாயார்

பாலாம்பிகா

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

தஞ்சாவூர்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

தஞ்சையை பீம சோழன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி பத்ராட்சி. மன்னன் இறைப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல அறச் செயல்களைப் புரிந்து வந்தான். தன் பெயராலேயே பீமேஸ்வரர் ஆலயம் கட்டினான். சிறந்த பக்திமானாகத் திகழ்ந்த மன்னனுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. இதனால் மனம் வருந்திய மன்னனும் அரசியும் புத்திரப் பேறு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். ஒருநாள் பீம சோழனின் மனைவியின் கனவில் சிவபெருமான் தோன்றி, “தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரருக்கும் கொங்கணேஸ்வரருக்கும் இடையில் சங்கர நாராயணர் என்ற பெயரில் எனக்கும் விஷ்ணுவுக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்ட வேண்டும். நான் அந்த இடத்தில் லிங்க ரூபமாக இருக்கிறேன். இக்கோயில் கட்டும் பணியைச் செய்தால் உங்களுக்குப் புத்திரப் பேறு கிட்டும்எனக் கூறி மறைந்தார். கனவில் கண்டதைக் கணவனிடம் தெரிவித்தாள் பத்ராட்சி. வியப்படைந்த மன்னன் மந்திரிப் பிரதானிகளை அழைத்துக் கொண்டு இறைவன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற போது, பிரகதீஸ்வரர் கோயிலுக்கும் கொங்கணேஸ்வரர் ஆலயத்திற்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். இறைவன் கூறியபடியே அந்த இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்தான். அப்போது அசரீரியாக சிவபெருமான், அருகே உள்ள கிணற்றில் பாவங்களைப் போக்க வல்ல குப்த கங்கை பொங்கி வருவதாகவும்; விசாக நட்சத்திரத்துடன் கூடிய திங்கட் கிழமையில் அதில் நீராடி, பக்தி சிரத்தையுடன் வணங்கி வந்தால் மன்னனுக்குப் புத்திரப் பேறு கிட்டும் எனவும் கூறினார். சிவபெருமான் வாக்கின்படி சோழ மன்னன் சங்கர நாராயணருக்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தான். இறைவன் அருளால் ஒரு ஆண்மகவு பிறந்தது என்கிறது தல வரலாறு.

மகேஸ்வர வடிவங்களில் ஒன்று சங்கர நாராயணர் வடிவம். இது வலப்புறம் சிவமாகவும் இடப்புறம் திருமாலாகவும் தோன்றும் அருள் வடிவம்.

அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை ரிஷிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவிடைமருதூர்

அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை ரிஷிபுரீஸ்வரர் திருக்கோயில், மேல வீதி, திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 44 28152533, 9840053289 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ரிஷிபுரீஸ்வரர்

தாயார்

ஞானாம்பிகை

தல விருட்சம்

வில்வமரம்

தீர்த்தம்

கனகதீர்த்தம் என்கிற காகதீர்த்தம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

திருவிடைமருதூர்

மாவட்டம்

தஞ்சாவூர்

மாநிலம்

தமிழ்நாடு

திருவிடை மருதூர் மகாலிங்கம் கோயில் தோன்றுவதற்கு முன்பே இந்த கோயில் தோன்றியதாக கூறப்படுகிறது. பரத்வாசர், காசிபர், கவுதமர், அகத்தியர், ரோமசர் போன்ற முனிவர்கள் சிவனை பூஜித்து ஞானம் பெறுவதற்காக வில்வக் காடுகள் நிறைந்த இந்த ஆலயம் இருந்த இடத்தில் தவம் மேற்கொண்டார். கடுந்தவம் புரிந்த ரிஷிகளுக்கு அருள்புரிவதற்காக ஞானாம்பிகையுடன் ரிஷிபுரீஸ்வரர் இவ்வாலயத்தில் தோன்றி ரிஷிகளுக்கு ஞானத்தை போதித்தார். ரிஷிகளுக்கு அருள்புரிந்ததால் ரிஷிபுரீஸ்வரர் என்றும் அவர்களுக்கு ஞனாத்தை அளித்ததால் ஞானாம்பிகை என்றும் சிறப்பு பெயர் வந்தது.

இத்தலம் அகத்தியர், பரத்வாசர், காசிபர், கவுதமமுனிவர், கவுசிக முனிவர், உரோமச முனிவர் போன்றவர்கள் தவம் செய்து ஞானம் பெற்ற ஸ்தலம். இதனால் பரத்வாச கோத்திரம், காசிப கோத்திரம், கவுசிக கோத்திரத்தை சேர்ந்தவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலம் மருதமரம் நிறைந்த மத்தியார்ச்சுனக் காடாகும். வடக்கே மல்லிகார்ச்சுனம் எனப்படும் ஸ்ரீசைலம் தெற்கே புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடைமருதூர் இவற்றின் நடுவே உள்ளதால் இது மத்தியார்ச்சுனம் எனப்பட்டது.