Monthly Archives: December 2011

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்) திருக்கோயில், திருவிளநகர்

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்) திருக்கோயில், திருவிளநகர்(ஆறுபாதி), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364 – 282 129 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார், வஜ்ரவனேஸ்வரர்)
அம்மன் வேயுறுதோளியம்மை
தல விருட்சம் விழல் என்ற புல்செடி
தீர்த்தம் காவிரி, மெய்ஞான, பொய்கை தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் விழர்நகர், திருவிளநகர்
ஊர் திருவிளநகர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக, கூடை நிறைய பூ எடுத்துக்கொண்டு ஆற்றைக்கடந்து வருவான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடச்செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். ஆற்றின் கரையை நோக்கி செல்ல போராடினான். இதனால் இறைவனது திருப்பள்ளி எழுச்சிக்கு பூவை கொண்டு செல்லக் காலதாமதம் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இறைவனைப் பிரார்த்தித்தான்.

இவனது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் ஆற்றின் துறையைக் காட்டி உதவினார். அருள்வித்தனின் பெருமை உலகிற்கு தெரிந்தது. இதனால் இறைவன் துறை காட்டும் வள்ளல்ஆனார்.

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 223 779, 226 436, 93451 49412, 94422 36436 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாயூரநாதர் (வள்ளலார்)
அம்மன் அபயாம்பிகை, அஞ்சொல்நாயகி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் இடபம், பிரம்ம, அகத்திய தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மாயூரம், திருமயிலாடுதுறை
ஊர் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு, தன் மருமகனான சிவனை அழைக்கவில்லை. எனவே சிவன், அம்பாளை யாகத்திற்கு செல்ல வேண்டாமெனக் கூறிவிட்டார். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டித் தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், “மாயூரநாதர்என்றும் பெயர் பெற்றார்.


இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு, பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி இலிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சன்னதிக்குப் பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, “மயூரதாண்டவம்என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.