Monthly Archives: December 2011

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 276 113, +91-94862 78810 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தேவபுரீஸ்வரர் (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்)
அம்மன் மதுரபாஷினி, தேன் மொழியாள்
தல விருட்சம் கல்வாழை
தீர்த்தம் தேவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவனூர், திருத்தேவூர்
ஊர் தேவூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

இராவணன் குபேரனிடம் போரிட்டு அவனது செல்வக் கலசங்களை எடுத்து சென்றான். வருத்தமடைந்த குபேரன் தனது செல்வங்கள் மீண்டும் கிடைக்க பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அப்படி வழிபாடு செய்து வரும் போது இத்தலத்தில் உள்ள சிவனுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். பூஜைக்கு மகிழ்ந்த ஈசன், குபேரனுக்கே அந்த செல்வக் கலசங்கள் கிடைக்கச் செய்ததாக தல புராணம் கூறுகிறது.

வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி தேவகுருஎன அழைக்கப்படுகிறார். பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து சிவவிஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கிறாள்.

அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர்

அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4366 – 276 733 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி
அம்மன் வனமூலையம்மன், சுந்தரகுஜாம்பிகை
தல விருட்சம் பத்ரி, இலந்தை
தீர்த்தம் சரவணப்பொய்கை, அக்னி, சேஷ, பிரம்ம, சூரிய, சந்திர, குபேர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீவளூர், திருக்கீழ்வேளூர்
ஊர் கீழ்வேளூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

திருச்செந்தூரில் முருகப்பெருமான், சூரனை கொன்ற கொலைப்பாவம் நீங்க சிவனை வேண்டினார். கீழ்வேளூர் திருத்தலத்தில் குளம் உண்டாக்கி சிவனை வழிபட்டால் பாவம் விலகும் என சிவன் அருளினார். அதன்படி முருகப்பெருமானும் நவவீரர்களுடன் இத்தலம் வந்தார். முதலில் முழுமுதற்கடவுளான விநாயகரை மஞ்சளால் பிடித்து வழிபட்டார். அதுவே இப்போது கீழ்வேளூர் அருகே மஞ்சாடிஎனப்படுகிறது. அடுத்து சிவலிங்க பூஜை செய்வதற்காக, தேவதச்சன் மயனை கொண்டு அருமையான சிவாலயத்தைக் கட்டி, புஷ்கலம் எனப்படும் விமானத்தையும் அமைத்தார். கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் தனது வேலால் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் தானும், தன்னுடன் வந்த நவவீரர்களும், சேனாதிபதிகளும், பூதப்படையினரும் சேர்ந்து நீராடினார். இதனால் இத்தலம் வேளூர்ஆனது. பின் முருகன் சிவனை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவம் முழுமையடையாமல் இருக்க தீய சக்திகள் இடையூறு விளைவித்தன. இதிலிருந்து தன்னை காக்க பார்வதியை அழைத்தார் முருகன். முருகன் அழைத்தவுடனேயே தாய் பார்வதி, “அஞ்சுவட்டத்தம்மன்என்ற திருநாமம் கொண்டு நான்கு திசை மற்றும் ஆகாயத்திலுமாக சேர்த்து காவல் புரிந்தார்.

சிங்கத்துவஜன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடி அலைந்த போது களைப்பால் தாகம் ஏற்பட்டது. ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு சென்று, அரசன் என்ற ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வரும்படி ஆரவாரமாகக் கத்தினான். இதனால், தியானத்தில் இருந்த முனிவர் கோபத்துடன் வெளியில் வந்து, “கழுதை போல் கத்துகிறாயே, நீ கழுதையாகப் போஎன்று சபித்தார். மற்றொரு காட்டரசன் விந்திய மலையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரைத் தரிசிக்கச் சென்றவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால் அந்த அரசனையும் கழுதையாகுமாறு அகஸ்தியர் சபித்தார். அவர்கள் கழுதையாகப் பிறந்தனர். வணிகன் ஒருவன் அவற்றைப் பொருள் சுமக்கப் பயன்படுத்தினான். ஒருநாள், கழுதைகள், தற்போதைய அட்சயலிங்க சுவாமி கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் நீர் பருகின. இறைவனின் அருளால் அவை தமது முற்பிறப்பு வரலாற்றை உணர்ந்தன. அதை மனித மொழியில் பேசிக்கொண்டன. கழுதைகள் பேசுவதைக் கவனித்த வணிகன், அவற்றை விட்டுவிட்டு ஓடிவிட்டான். இரண்டு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. அட்சயலிங்க சுவாமியின் அருள் பெற்றன. “ஆடிமாதம் பவுர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தின் நீரருந்தினால், நீங்கள் மீண்டும் மனித வடிவை அடைவீர்கள்என்று அசரீரி ஒலிக்கவே, இரண்டும் நீர் அருந்தி மனித வடிவத்தைப் பெற்றன.