அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 276 113, +91-94862 78810 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தேவபுரீஸ்வரர் (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்)
அம்மன் மதுரபாஷினி, தேன் மொழியாள்
தல விருட்சம் கல்வாழை
தீர்த்தம் தேவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தேவனூர், திருத்தேவூர்
ஊர் தேவூர்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர், அப்பர்

இராவணன் குபேரனிடம் போரிட்டு அவனது செல்வக் கலசங்களை எடுத்து சென்றான். வருத்தமடைந்த குபேரன் தனது செல்வங்கள் மீண்டும் கிடைக்க பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அப்படி வழிபாடு செய்து வரும் போது இத்தலத்தில் உள்ள சிவனுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். பூஜைக்கு மகிழ்ந்த ஈசன், குபேரனுக்கே அந்த செல்வக் கலசங்கள் கிடைக்கச் செய்ததாக தல புராணம் கூறுகிறது.

வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி தேவகுருஎன அழைக்கப்படுகிறார். பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து சிவவிஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கிறாள்.

விருத்திராசுரனை கொன்ற பழி தீர, இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்டு அருள்பெற்றதால், இறைவன் தேவபுரீஸ்வரர்ஆனார். தலம் தேவூர்ஆனது. தேவர்கள் வழிபட்ட தலமாதலால், இங்குள்ள அனைத்து தெய்வங்களும் தேவஎன்ற அடைமொழியுடன் வணங்கப்படுகிறார்கள். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும். தேவர்கள் இறைவனை வழிபட்ட போது, தேவலோகத்தில் இருந்து வந்த இந்த வாழையும் இறைவனை வழிபட்டு தலவிருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்தது என்பர். திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திங்கள் கிழமைகளில் இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள். பாண்டவர்களுக்கு துணை புரிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு இங்கு தங்கி இறைவனை வழிபாடு செய்துள்ளான். உலகில் 12 ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கவுதம முனிவர் இத்தலத்தில் தங்கி, இலிங்கம் அமைத்து வழிபாடு செய்து, பொன்னும் பொருளும் பெற்று மக்களின் பசிப்பிணி போக்கியதாக வரலாறு கூறுகிறது. மகத நாட்டு மன்னன் குலவர்த்தனன் பரிவேள்வியில் வெற்றிபெற, இங்குள்ள இறைவனை வழிபட்டு வேள்வியை நிறைவேற்றினான்.

வழிபட்டோர்: மாணிக்க வாசகர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார்.

கோச்செங்கட்சோழ மன்னனால் கட்டப்பட்ட 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. மூன்று நிலை இராஜ கோபுரம், 5 பிரகாரங்கள் உள்ளன. சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சுப்பிரமணியர் சன்னதி அமைந்திருப்பதால் இத்தலம் சோமாஸ்கந்த மூர்த்திதலமாகும். இத்தல விநாயகரை பிரும்ம வரதர் என்றும் அழைக்கிறார்கள். அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று. பிரகாரத்தில் பாலகணபதி, பாலமுருகன், இந்திரலிங்கம், கவுதமலிங்கம், அகல்யா இலிங்கம், மாணிக்கவாசகர் வழிபட்ட ஆத்மலிங்கம், நடராஜர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

தேவாரப்பதிகம்:

மறைகளான் மிகவழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த வெங்கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர் அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன்று இலமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 85வது தலம்.

திருவிழா:

வைகாசி பெருவிழா, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

சிறந்த குரு ஸ்தலமான இங்கு வழிபாடு செய்வதால் குரு சம்மந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். செல்வம் பெருகவும், இழந்த செல்வங்கள் மீண்டும் பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் தேவபுரீஸ்வரரை வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திங்கள் கிழமைகளில் இங்குள்ள இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *