Category Archives: சேலம்

அருள்மிகு கந்தாஸ்ரமம், உடையாபட்டி

அருள்மிகு கந்தாஸ்ரமம், உடையாபட்டி, சேலம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை மணி 4 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஞானஸ்கந்தர், குருநாதர்

அம்மன்

ஸ்கந்தமாதா, பராசக்தி

தலவிருட்சம்

கடம்ப மரம்

தீர்த்தம்

உத்திரவாகினி, கன்னிமார்ஓடை

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

உடையாபட்டி

மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான், தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி, இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். காலப்போக்கில் பெரிய அளவில் எண்ணற்ற கண்கவர் சிற்பங்களுடன் கூடிய கோயிலாக இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டுள்ளது. சேலம் நகருக்கு மிக அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த கந்தாசிரமம் அமைந்துள்ளது.

முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும்(இதயம்), முருகன் அறிவாகவும்(மூளை) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சந்நிதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள். முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் என்று, ஜோதிட சாஸ்திரப்படி, முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர், புவனேஸ்வரி, முருகன் சன்னிதானத்தில் உள்ளது.

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம் மாவட்டம்.

+91- 427 – 240 064 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தண்டாயுதபாணி

உற்சவர்

சண்முகர்

தலவிருட்சம்

பொன்அரளி

தீர்த்தம்

குமரதீர்த்தம்

ஆகமம்

காரண ஆகமம், காமீக ஆகமம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

குமரகிரி

மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

நாரதர் கொடுத்த மாங்கனியைத் தனக்குத் தரவேண்டுமெனக் கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாகச் சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, “தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்குச் சென்றார். பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை. இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே பக்தர்கள் இவரை, “மாம்பழ முருகன்என்றும் அழைக்கிறார்கள்.