Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077 (சென்னை), திருவள்ளூர் மாவட்டம்.
*************************************************************************************************

+91-44-2680 0430, 2680 0487, 2680 1686 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – தேவி கருமாரியம்மன்

தல விருட்சம்: – கருவேல மரம்

தீர்த்தம்: – வேலாயுத தீர்த்தம்

ஆகமம் : – காமீகம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – வேலங்காடு

ஊர்: – திருவேற்காடு

மாவட்டம்: – திருவள்ளூர்

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் நாகப் புற்று ஒன்று இருந்தது. இதனை மக்கள் அம்பிகையாகப் பாவித்து வணங்கி வந்தனர்.

ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோயில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள். பின்பு இங்கு கோயில் கட்டப்பட்டது.ம்பிகை தானாகத் தோன்றியதால் இவளுக்கு, “கருவில் இல்லாத கருமாரி“ என்ற பெயரும் உண்டு.

முன்பு இத்தலத்தில் புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும்போது கோயிலைவிட்டு வெளியேறியது. இந்த நாகம் ராசகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோடம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம்

அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம், திருப்பூர் மாவட்டம்
**************************************************************************************

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்துப்பாளையம் கிராமத்தில் எட்டு தலை முறைக்கு முன் கவுண்டய்யனும், அவர் தங்கை வள்ளி அம்மாளும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார்கள். தினமும் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுக்கு ஓட்டிச் செல்வது கவுண்டய்யனின் வேலை. காட்டில் இருந்து திரும்பும் அண்ணனுக்காக சுடச்சுடச் சோறாக்கி வைத்திருப்பது வள்ளியம்மாள். நாட்கள் பல கழிந்தன.

இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. ஆடுமாடுகளுக்கு குடிக்கவும் தண்ணீர் கிடைக்காத நிலை. தங்கையை, உறவினர் ஒருவரது பொறுப்பில் விட்டு விட்டு, ஆடுமாடுகளைத் தானே ஓட்டிக் கொண்டு பொள்ளாச்சிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் கவுண்டய்யன். ஆனால், அவரைப் பிரிய மனம் இல்லாத வள்ளியம்மாள் தானும் உடன் வருவதாகக் கூறினாள். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கவுண்டய்யன். இருவரும் பொள்ளாச்சியிலேயே தங்கினர். ஒருநாள், ஆடுமாடுகளை மேய்க்க அருகில் இருந்த மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கே, எதிர்பாராத விதமாக வள்ளியம்மாளைப் பாம்பு கடித்து விட்டது. துடிதுடிக்கத் தன் கண்ணெதிரிலேயே தங்கை இறந்துபோனதைக் கண்டு, கலங்கிய கவுண்டய்யன் மயங்கிச் சரிந்தார்.

சற்று நேரத்துக்குப் பிறகு கண் விழித்தவர், இனியும் இந்த ஊரில் இருக்கக் கூடாது என்ற முடிவுடன் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார். ஆனாலும் தங்கை இறந்த சோகத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. ஊண், உறக்கமின்றித் தவித்தார். “தங்கச்சி நெனைப்புலேயே இவனும் போய்ச் சேர்ந்திடுவான் போலஎன்று ஊர்மக்கள் வருந்தினர்.