Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 320 607 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீர ஆஞ்சநேயர்
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் வசிஷ்ட தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஆத்தூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சீதையை, இராவணன் கடத்திச்சென்றபோது அவளைத்தேடி தென்திசை நோக்கி சென்ற இராமர் இவ்வழியாக சென்றார். நீண்ட தூரம் வந்த அவர், இத்தலத்திற்கு அருகில் இருக்கும் மலை மீது ஏறி, சீதாதேவி இருக்கிறாளா? என்று பார்த்தார். அங்கு சீதையை காணாததால் வருத்தத்துடன் சிறிது நேரம் ஓரிடத்தில் அமர்ந்தார். தன் தலைவன் இராமன் சோகமாக இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர், “இராமருக்கு எந்த வகையில் நாம் உதவி செய்வதுஎன வசிஷ்ட நதியின் கரையில் அமர்ந்து சிந்தனை செய்தாராம். இவ்விடத்தில் அவர், “வீரஆஞ்சநேயராககோயில் கொண்டுள்ளார். இராமர் அமர்ந்து சென்றதாக கருதப்படும் மலை இத்தலத்திற்கு அருகில் உள்ளது.

சூரியனின் மகன் சனி, சனியின் மகன் குளிகன். ஆஞ்சநேயர், சூரியனின் சிஷ்யன். இவரே சனிக்கு அதிபதியான பெருமாளின் ஆஸ்தான சீடர். எனவே, இவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் குளிகை நேரத்தில் சனிதோஷ பரிகாரபூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. இப்பூஜையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில், பெரணமல்லூர்

அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில், பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வரதஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெரணமல்லூர்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

மலைகளும் வயல்களும் நிறைந்த இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதியருக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஒருநாள் அவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தை தோண்டிப் பார்க்க, அங்கே அனுமன் சிலை இருந்ததைக் கண்டு வியந்தனர். பின்னர் அருகேயிருந்த சிறுகுன்றின்மேல் ஊர் மக்கள் உதவியுடன் அனுமனைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அடுத்த வருடமே அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தது. ஊரே அனுமனை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த அனுமனின் ஆற்றல் மெல்ல மெல்ல அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் பரவத் தொடங்கியது. பொதுவாக திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரரை கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவர். அதே போல் சிறு குன்றில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் வரத ஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு. முக்கியமாக அமாவாசை நாளில் இங்கே கிரிவலம் வந்து அனுமனை வணங்கிச் சென்றால் மன தைரியம் கூடும்; சனி தோஷங்கள் விலகும்; திருமணம், குழந்தைப்பேறு, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், நோயற்ற வாழ்வு போன்ற நற்பலன்கள் நடக்கும் என்கிறார்கள் பக்தர்கள். சிறு குன்றில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் வரத ஆஞ்சநேயரையும் எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு.