அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 320 607 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீர ஆஞ்சநேயர்
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் வசிஷ்ட தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஆத்தூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சீதையை, இராவணன் கடத்திச்சென்றபோது அவளைத்தேடி தென்திசை நோக்கி சென்ற இராமர் இவ்வழியாக சென்றார். நீண்ட தூரம் வந்த அவர், இத்தலத்திற்கு அருகில் இருக்கும் மலை மீது ஏறி, சீதாதேவி இருக்கிறாளா? என்று பார்த்தார். அங்கு சீதையை காணாததால் வருத்தத்துடன் சிறிது நேரம் ஓரிடத்தில் அமர்ந்தார். தன் தலைவன் இராமன் சோகமாக இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர், “இராமருக்கு எந்த வகையில் நாம் உதவி செய்வதுஎன வசிஷ்ட நதியின் கரையில் அமர்ந்து சிந்தனை செய்தாராம். இவ்விடத்தில் அவர், “வீரஆஞ்சநேயராககோயில் கொண்டுள்ளார். இராமர் அமர்ந்து சென்றதாக கருதப்படும் மலை இத்தலத்திற்கு அருகில் உள்ளது.

சூரியனின் மகன் சனி, சனியின் மகன் குளிகன். ஆஞ்சநேயர், சூரியனின் சிஷ்யன். இவரே சனிக்கு அதிபதியான பெருமாளின் ஆஸ்தான சீடர். எனவே, இவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் குளிகை நேரத்தில் சனிதோஷ பரிகாரபூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. இப்பூஜையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆஞ்சநேயர், இராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.

இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார். இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. இராமபிரான் இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்த போது, மிகப்பெரிய பாறைகளை எடுக்க வேண்டியிருந்தது. அதை அகழ்ந்து தோண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராக தன்னை உருமாற்றிக் கொண்டார் ஆஞ்சநேயர். அதில் ஒன்று வராஹ முகம். பன்றி முகத்தைக் கொண்டு பூமியை அகழ்ந்து தோண்டி, பாறைகளைப் பெயர்த்தெடுத்தார். அளவில் மிகவும் சிறிய இவரை வசிஷ்ட முனிவர் வணங்கிச் சென்றுள்ளார். இங்கு சுவாமிக்கு பூஜை செய்யப்பட்ட முடிகயிறுஎனும் மஞ்சள் கயிறைபிரசாதமாக தருகின்றனர். இதனைக் கட்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அருகில் கோயில் வளாகத்திலுள்ள அரசமரத்தின் பொந்திற்குள் உள்ள விநாயகர் சிலை மற்றும் நாகர்சிலைகள் காண வேண்டியவை. இத்தலவிநாயகர் மரப்பொந்து விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு சுவாமிக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது.

திருவிழா:

அனுமன் ஜெயந்தி, ராமநவமி, பவுர்ணமி பூஜை.

வேண்டுகோள்:

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, வெற்றிலை, எலுமிச்சை மாலை போட்டு வழிபட்டால் குடும்பத்தில் கடன் தொல்லைகள் தீர்ந்து, ஐஸ்வர்யம் பெருகும், பணிவாய்ப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *