அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம்

அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம், திருப்பூர் மாவட்டம்
**************************************************************************************

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்துப்பாளையம் கிராமத்தில் எட்டு தலை முறைக்கு முன் கவுண்டய்யனும், அவர் தங்கை வள்ளி அம்மாளும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருக்க திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார்கள். தினமும் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுக்கு ஓட்டிச் செல்வது கவுண்டய்யனின் வேலை. காட்டில் இருந்து திரும்பும் அண்ணனுக்காக சுடச்சுடச் சோறாக்கி வைத்திருப்பது வள்ளியம்மாள். நாட்கள் பல கழிந்தன.

இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. ஆடுமாடுகளுக்கு குடிக்கவும் தண்ணீர் கிடைக்காத நிலை. தங்கையை, உறவினர் ஒருவரது பொறுப்பில் விட்டு விட்டு, ஆடுமாடுகளைத் தானே ஓட்டிக் கொண்டு பொள்ளாச்சிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் கவுண்டய்யன். ஆனால், அவரைப் பிரிய மனம் இல்லாத வள்ளியம்மாள் தானும் உடன் வருவதாகக் கூறினாள். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கவுண்டய்யன். இருவரும் பொள்ளாச்சியிலேயே தங்கினர். ஒருநாள், ஆடுமாடுகளை மேய்க்க அருகில் இருந்த மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கே, எதிர்பாராத விதமாக வள்ளியம்மாளைப் பாம்பு கடித்து விட்டது. துடிதுடிக்கத் தன் கண்ணெதிரிலேயே தங்கை இறந்துபோனதைக் கண்டு, கலங்கிய கவுண்டய்யன் மயங்கிச் சரிந்தார்.

சற்று நேரத்துக்குப் பிறகு கண் விழித்தவர், இனியும் இந்த ஊரில் இருக்கக் கூடாது என்ற முடிவுடன் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார். ஆனாலும் தங்கை இறந்த சோகத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. ஊண், உறக்கமின்றித் தவித்தார். “தங்கச்சி நெனைப்புலேயே இவனும் போய்ச் சேர்ந்திடுவான் போலஎன்று ஊர்மக்கள் வருந்தினர்.

இந்த நிலையில் ஒருநாள், கவுண்டய்யனின் கனவில் வந்தாள் வள்ளியம்மாள். “அண்ணா,
எதற்கும் கவலைப்படாதே. நான் உன்கூடவே இருக்கேன். ஊருக்குக் கிழக்கில், ஊஞ்சை
வனச்சோலையில் இச்சி மர நிழலில் அடக்கமாகி இருக்கிறேன். நீயும் நம் சொந்தங்களும் வருடத்தில் ஒரு நாள் என்னை வழிபடுங்கள். நம் சொந்த பந்தங்களை மட்டுமின்றி, இந்த ஊரையே செழிக்க வைக்கிறேன். பஞ்சம் பிழைப்பதற்காக ஊரை விட்டுச் சென்றதால்தானே என்னைப் பிரிய நேர்ந்தது. இனி, இந்த அவல நிலை நம்மூரில் வேறு எவருக்கும் ஏற்படாது. இந்த ஊர் வளமான பூமியாக இருக்கும். இது என் பொறுப்புஎன்று கூறி மறைந்தாள்.

நீண்ட நாள் கழித்து தங்கையின் குரலைக் கேட்டு மகிழ்ந்ததுடன், அவள் சாமியாகி, ஊரையே செழிக்க வைக்கப் போகிறாள் என்பதை எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஊஞ்சை வனச் சோலைக்கு ஓடினார். அங்கே, இச்சி மரத்தடியில் இருந்த கல்லின் மீது, காராம்பசு ஒன்று பால் சொரிந்தபடி இருந்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த கவுண்டய்யன்,
ஊருக்குள் ஓடி தகவலைச் சொன்னார். அதிசயித்த ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில் வள்ளியம்மாளுக்கு கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். வள்ளியம்மாள் கன்னிப் பெண் என்பதால், கூடவே ஏழு கன்னிமார்களுக்கும் சிலைகள் பிரதிட்டை செய்து கன்னிமாரம்மன் எனப் பெயரிட்டனர்.

ஊரின் கிழக்கு எல்லையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது ஆலயம். திறந்தவெளி
கோயிலுக்குள் அம்மனும் பரிவார தெய்வங்களும் மேற்கூரையுடன் அமைந்த கொட்டகையில்
காட்சி தருகின்றனர். கோயில் வாசலில் பிரமாண்டமாக நிற்கின்றன பூதகணங்களும்
குதிரைகளும். கோயிலின் உள்ளேயும் பூதகணங்களை தரிசிக்க முடிகிறது.

உள்ளே முக்கிய சந்நிதியில் பெரிய காண்டியம்மன், விநாயகர், கன்னிமார் அம்மன்கள், கருப்பண்ணசாமி ஆகியோர் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு எதிரே உள்ள நிலைப்படியில், மரத்தால் ஆன ஊஞ்சல்கள். விழாக் காலங்களில், பெரியகாண்டி அம்மனை
இந்த ஊஞ்சலில் வைத்து மெள்ள ஆட்டி விடுவார்களாம். இதைக் காண ஏராளமானோர்
கூடுவர். கோயிலைச் சுற்றி நேர்த்திக்கடனாக வைக்கப்பட்ட மனிதர்கள் மற்றும்
பிராணிகளின் பொம்மைச் சிலைகள் நிறையவே உள்ளன. பிரதான நுழைவாயிலைக் கடந்ததும்
கிழக்குப் பார்த்த சிறிய மாடம் ஒன்றில், வெள்ளையம்மன் காட்சி தருகிறாள்.

மாசி மாதம்மகா சிவராத்திரி நாளில், கன்னிமார் அம்மனுக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு துவங்கும் விழா, அதிகாலை 6 மணிக்கு நிறைவுறுமாம்.

மகா சிவராத்திரியன்று மாலை 6 மணிக்கு, ஊருக்குள் இருக்கிற கோயில் வீட்டில்
இருந்து உத்சவமூர்த்தியை மேளதாளத்துடன் கோயிலுக்கு எடுத்து வருவர்; பிறகு,
கோயில் வாசலில் ஊர்மக்கள் ஒன்றுகூடிப் பொங்கல் படையலிடுவர். நள்ளிரவு சுமார் 2
மணிக்கு, கன்னிமார் அம்மனின் அருமை பெருமைகளையும் அவளின் வரலாறையும்
வள்ளியம்மாளின் வழிவந்த உறவினர்கள் பாட்டாகப் பாடுவார்கள். அப்போது, அங்கேயுள்ள ஆண்கள் பலரும் அருள் வந்து மயங்கி விழுவார்களாம்.

பிறகு அருகில் உள்ள கிணற்றில் தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனிடம் வைத்து பூசைகள் செய்வர். இதையடுத்து, மயங்கிக் கிடக்கும் ஆண்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்படும். இதனை படுகளம்
போடுதல்என்கின்றனர். இதையடுத்து கன்னிமாரம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும்
சிறப்பு பூசைகள் நடத்தி, விழாவை நிறைவு செய்கின்றனர். இதன் பிறகு, அடுத்த
வருடத்தில்தான் கன்னிமாரம்மனுக்கு பூசைகள் நடைபெறுமாம்!

இந்த அம்மனை வணங்கி வழிபட்டால், அமோக விளைச்சல் பெருகும்; குழந்தைச் செல்வம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும் என்கின்றனர் பக்தர்கள்.

2 Responses to அருள்மிகு கன்னிமாரம்மன் கோயில், மடத்துப்பாளையம்

  1. வணக்கம் ஐயா. எப்படி இருக்கிறீர்கள்?

  2. அன்பு குமரா,
    நலம். நனக்காண நாட்டம் மிக. வண்டிஓடுகிறது(மருந்து, மாத்திரையில்). கொஞ்சம் மன அமைதியின்மை. தொடர்ச்சியாக எழுத வரவில்லை. மனம் அலைபாய்கிறது. ஆகட்டும். பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *