Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்

அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்– 609 106 . நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-236 172 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பேரருளாளன்
உற்சவர் செம்பொன்னரங்கன், ஹேரம்பர்
தாயார் அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம் நித்ய புஷ்கரணி, கனகதீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் திருநாங்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

இராவணனுடன் யுத்தம் முடித்த பின், இராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி, தங்கத்தினால் மிகப்பெரிய பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்குத் தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலைக் கட்டியதால் இத்தலம் செம்பொன்செய் கோயில்என வழங்கப்படுகிறது.

108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன்என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் பேரருளாளன்ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக் கோயில், திருஇந்தளூர்

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக் கோயில், திருஇந்தளூர்– 609 003. நாகப்பட்டினம் மாவட்டம்.+91- 4364-223 330 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர்
தாயார் பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி
தீர்த்தம் இந்து புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திரு இந்தளூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

நினைத்ததை எல்லாம் பெற்றுத்தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்தான். இவன் ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான். இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தேவலோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதம் முடித்து விட்டால் தேவலோகப்பதவி கூட கிடைத்து விடும். மானிடனுக்கு இப்பதவி கிடைத்து விட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் எனப் பயந்தனர்.

இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர். துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க, பூமிக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். அவன் ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும் துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்போது தான் ஏகாதசியின் முழுப்பயனும் அவனுக்கு கிடைக்கும். துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க, மன்னன் உணவு உண்ணத் தயாராக இருந்தான். அதற்குள் துர்வாசர் வந்து விட்டார். தன் விரதத்தை தடுக்கத்தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது. முனிவரை வரவேற்ற மன்னன்,”தாங்களும் என்னுடன் உணவருந்தினால், எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்என்றான். முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறிச் சென்றார். முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும். மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான். துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது. கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்துவிடுவார். இன்னும் சிலநிமிடங்களே இருந்தது. வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தான். உடனே தலைமைப்பண்டிதர்,”உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும்என்று கூறினர். அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காகக் காத்திருந்தான்.