Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை, தென்னாம்பட்டினம் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 93605 77673, 97879 29799 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுந்தரேஸ்வரர்
அம்மன் அழகம்மை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சந்திர தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கலிக்காமூர்
ஊர் அன்னப்பன்பேட்டை
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது, சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய், அமங்கலையாக (கணவனை இழந்த பெண்) இருந்ததைக் கண்டு வருந்தியது. பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை, வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார். அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர், “சுந்தரேஸ்வரர்என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு வில்வவன நாதர்என்றும் பெயருண்டு.

சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. “இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

அருள்மிகு முல்லைவன நாதர் உடனுறை அணிகொண்ட கோதையம்மை திருக்கோயில், திருமுல்லைவாசல்

அருள்மிகு முல்லைவன நாதர் உடனுறை அணிகொண்ட கோதையம்மை திருக்கோயில், திருமுல்லைவாசல், நகாப்பட்டினம் மாவட்டம்.

+91-94865 24626 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முல்லைவனநாதர், மாசிலாமணீசர் (யூதிகா பரமேஸ்வரர்)
அம்மன் அணிகொண்ட கோதையம்மை, (சத்தியானந்த சவுந்தரி)
தல விருட்சம் முல்லை
தீர்த்தம் பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தென்திருமுல்லைவாயில்
ஊர் திருமுல்லைவாசல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர, தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லைக் கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லைக் கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை.

முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே எனப் பார்க்க, அங்கே இலிங்கம் ஒன்று இரத்தம் வழியக் காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய வளவன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனைக் காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல்என்று பெயர் வந்தது. இலிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.