Category Archives: பரிகார தலங்கள்

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 238 818, 239 700, 94427 14055 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பொற்கொடியம்மை, சொர்ணவல்லி
தல விருட்சம் மந்தாரை
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திலதைப்பதி, திலதர்ப்பணபுரி
ஊர் சிதலப்பதி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

இராவணன் சீதையை கடத்திச்சென்றான். அப்போது ஜடாயு எனும் கருடராஜன் ராவணனை தடுக்க முயன்றார். ஜடாயுவை, தன் வாளால் வீழ்த்திச் சென்றான் ராவணன். அப்போது அவ்வழியே வந்த இராமரிடம், சீதையை, இராவணன் கடத்திச் சென்றதை கூறிய ஜடாயு, இராமனின் மடியிலேயே உயிரை விட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்தார் இராமன். பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வனவாசம் முடிந்து, நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இராமர். அவரது வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்திருந்ததால், அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்தார். அரசலாற்றில் நீராடி, சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்வதற்காக போராடி உயிரை விட்ட ஜடாயுவுக்கு மரியாதை தரும்விதமாக, எள் வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். எனவே, சிவன் முக்தீஸ்வரர்என்றும், தலம் திலதர்ப்பணபுரிஎன்றும் பெயர் பெற்றது. “திலம்என்றால் எள்எனப்பொருள். முன் ஒரு காலத்தில், இந்த ஆலயங்கள் உள்ள இடத்தின் அருகில் ஹரி மற்றும் சிவ என்ற ஆறு ஓடிக்கொண்டு இருந்ததாம். பார்வதியின் தந்தை தட்சன் செய்த யாகத்தில், அவமானம் அடைந்த பார்வதி தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கதை அனைவரும் அறிந்ததே. அவள் செய்த காரியத்தினால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டு இருந்தது. தெய்வமே என்றாலும் தீயில் விழுந்து மரணம் அடைந்தால் இறந்தவளுக்கு சமானம். அந்த பிறவியில் இறந்துவிட்ட அவளுக்கு யார் தர்ப்பணம் செய்வார்கள்? அந்த தோஷத்தைக் களைந்து கொள்ளாவிடில் அவளால் மீண்டும் சிவபெருமானின் மனைவியாக எப்படி ஆவது? ஆகவேதான், அவள் பெற்ற ஆலோசனைப்படி மந்தார மரங்கள் சூழ்ந்து இருந்த அந்த வனப்பகுதியை (தற்போது ஆலயம் உள்ள இடம்) வந்து அடைந்தாள். முன் ஒரு காலத்தில் அந்த ஹரி சிவா நதிக்கு அருகில் இருந்த அந்த வனப்பிரதேசத்தில், சிவபெருமான் பெரும் தவம் செய்து உளார். அப்போது அவர் முடியில் இருந்த கங்கையும் அவருக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று எண்ணி, அங்கு அவர் தவம் முடியும்வரை அவருக்குக் காவலாக அமர்ந்து இருந்தாள். அதனால்தான் அந்த பூமி தில தர்பணபுரி கங்கை நதி ஓடும் காசிக்கு இணையாக ஆயிற்று.

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்(திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4369 -250 238 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி
தல விருட்சம் வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் வேததீர்த்தம், மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமறைக்காடு
ஊர் வேதாரண்யம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

வடமொழி வேதங்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் என்ற நான்கும் மனித உருக்கொண்டு, இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி, அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை. இனி நாங்கள் இருப்பது நல்லதல்லஎன்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும், வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம்என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றிப் பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார். அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர், “சம்பந்தரே! இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும்என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறைஎன்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக்கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.