அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலைப்பதி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4366 – 238 818, 239 700, 94427 14055 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் பொற்கொடியம்மை, சொர்ணவல்லி
தல விருட்சம் மந்தாரை
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திலதைப்பதி, திலதர்ப்பணபுரி
ஊர் சிதலப்பதி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

இராவணன் சீதையை கடத்திச்சென்றான். அப்போது ஜடாயு எனும் கருடராஜன் ராவணனை தடுக்க முயன்றார். ஜடாயுவை, தன் வாளால் வீழ்த்திச் சென்றான் ராவணன். அப்போது அவ்வழியே வந்த இராமரிடம், சீதையை, இராவணன் கடத்திச் சென்றதை கூறிய ஜடாயு, இராமனின் மடியிலேயே உயிரை விட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்தார் இராமன். பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வனவாசம் முடிந்து, நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இராமர். அவரது வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்திருந்ததால், அதற்காக சிரார்த்தம் செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்தார். அரசலாற்றில் நீராடி, சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவி செய்வதற்காக போராடி உயிரை விட்ட ஜடாயுவுக்கு மரியாதை தரும்விதமாக, எள் வைத்து பிதுர்தர்ப்பணம் செய்தார். எனவே, சிவன் முக்தீஸ்வரர்என்றும், தலம் திலதர்ப்பணபுரிஎன்றும் பெயர் பெற்றது. “திலம்என்றால் எள்எனப்பொருள். முன் ஒரு காலத்தில், இந்த ஆலயங்கள் உள்ள இடத்தின் அருகில் ஹரி மற்றும் சிவ என்ற ஆறு ஓடிக்கொண்டு இருந்ததாம். பார்வதியின் தந்தை தட்சன் செய்த யாகத்தில், அவமானம் அடைந்த பார்வதி தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கதை அனைவரும் அறிந்ததே. அவள் செய்த காரியத்தினால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டு இருந்தது. தெய்வமே என்றாலும் தீயில் விழுந்து மரணம் அடைந்தால் இறந்தவளுக்கு சமானம். அந்த பிறவியில் இறந்துவிட்ட அவளுக்கு யார் தர்ப்பணம் செய்வார்கள்? அந்த தோஷத்தைக் களைந்து கொள்ளாவிடில் அவளால் மீண்டும் சிவபெருமானின் மனைவியாக எப்படி ஆவது? ஆகவேதான், அவள் பெற்ற ஆலோசனைப்படி மந்தார மரங்கள் சூழ்ந்து இருந்த அந்த வனப்பகுதியை (தற்போது ஆலயம் உள்ள இடம்) வந்து அடைந்தாள். முன் ஒரு காலத்தில் அந்த ஹரி சிவா நதிக்கு அருகில் இருந்த அந்த வனப்பிரதேசத்தில், சிவபெருமான் பெரும் தவம் செய்து உளார். அப்போது அவர் முடியில் இருந்த கங்கையும் அவருக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று எண்ணி, அங்கு அவர் தவம் முடியும்வரை அவருக்குக் காவலாக அமர்ந்து இருந்தாள். அதனால்தான் அந்த பூமி தில தர்பணபுரி கங்கை நதி ஓடும் காசிக்கு இணையாக ஆயிற்று.

அப்படிப்படிப்பட்ட கால கட்டத்தில் இராமாயண யுத்தம் நடந்து முடிந்தது. இராமரும் லஷ்மணரும் வனவாசத்தில் இருந்தபோதுதான் தசரதர் மரணம் அடைந்தார். ஏற்கனவே பெரும் துயரத்தில் இருந்த இராமர் தனது தந்தைக்கு சிரார்தங்கள் செய்தாலும் அவர் மனதில் அமைதி ஏற்படவில்லை. யுத்தமும் முடிந்த பின் இராமேஸ்வரத்துக்குச் சென்று அங்கும் தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்தார். அதை செய்தும் அவர் மனக் குழப்பம் முழுவதுமாகத் தீரவில்லை. மனதில் அமைதி இல்லை. அதற்குக் காரணம் அவர் தர்ப்பணம் செய்த அனைத்து இடங்களிலும் பிடித்து வைத்த பிண்டத்தை எந்த பறவையும் சாப்பிடவில்லை; வைத்தவை அப்படியே இருந்தன. அப்படி என்றால் தசரதரின் ஆவி அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லையா என்ற சந்தேகம் எழுந்தது. பிருமகத்தி தோஷமும் தொடர்வது போல மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. ஆகவே அவர் குரு வசிஷ்டரிடம் அது குறித்துக் கேட்டார்.
வசிஷ்டரும் அது குறித்து நாரத முனிவரிடம் கேட்டபோது தமக்கு கங்கை தேவி கூறிய ஒரு தகவலை நாரத முனிவர் அவரிடம் கூறினார். தற்போதைய திலதர்ப்பண பூமியில் சிவபெருமான் தவத்தில் இருந்தபோது தாம் (கங்கை) அங்கு ஓடிக்கொண்டு இருந்த சிறு நதியில் அமர்ந்து கொண்டு இருந்ததாகவும் அப்போது அந்த வனபிரதேசத்தில் இருந்தவர்கள் தமது இறந்து போன வம்சத்தினருக்கு அங்கு வந்து, தான் அமர்ந்து இருந்த நதியில் குளித்து விட்டு, தர்ப்பணம் செய்தபோது அவர்கள் பிடித்து வைத்த பிண்டங்களை இறந்து போனவர்களின் ஆவிகள் நேரிலே பெற்றுக் கொண்டு சென்றனர் எனவும், சற்று தூரத்தில் அந்தராத்மியாக அவற்றை அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த பிரும்மாவும் எதையோ குறித்துக் கொண்டு இருந்ததைக் கண்டதாகவும், நேரம் காலம் இன்றி அனு தினமும் அங்கு வந்து கொண்டு தர்ப்பணம் செய்த அனைவரது குடும்பத்தினர் ஆவிகளும் நேரிலே பிண்டங்களை பெற்றுக் கொண்டு சென்றதைக் கண்டதாகவும் கூறினாளாம். அதைக் கேட்டு அதிசயித்த நாரதர் சிவபெருமானிடம் நேரிலே சென்று அந்த அதிசயத்துக்கான காரணம் குறித்துக் கேட்டபோது, சிவபெருமான் நான் தவம் இருந்த அந்த இடத்தில் யம தர்மராஜனுக்கு எந்த அதிகாரம் கிடையாது. ஆகவேதான் அனைத்து காலத்திலும், நேரமும் காலமும் இன்றி எந்த ஒருவரும் தமது குடும்பத்தில் மரணம் அடைந்தவருக்கு, நான் தவத்தில் இருந்த அந்த இடத்திற்கு வந்து பித்ருக்களின் காரியங்களைச் செய்யும்போது அவர்களது ஆவிகளை யமதூதர்கள் அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது என்னுடைய கட்டளையாக இருந்தது. அந்த ஆவிகள் நேரிலே வந்து பிண்டங்களை பெற்றுக் கொண்டு மனம் திருப்தி அடைந்து யமனின் பிடியில் இருந்து விடுதலை ஆகி என்னிடம் வந்து சிவலோகப் பிராப்தி அடைந்தன. அவர்களை படைத்த பிரும்மனும் அவர்களது தோஷங்களை தமது குறிப்பில் இருந்து நீக்கிக் கொண்டபடி அமர்ந்து கொண்டு இருந்தார். ஏன் எனில் அவர்களுக்கு அடுத்த பிறவி தரும்போது அதற்கேற்ப அவர்களுக்கு விதியை ஏற்படுத்த வேண்டும் அல்லவா? மேலும் எனது மனைவியான பார்வதியும், தனது இறந்த ஆவிக்கு ஏற்பட்ட தோஷத்தைக் களையவும் தனக்குத் தானே தர்ப்பணம் செய்து கொண்டு மீண்டும் என்னை வந்து அடையவும் அங்கு வந்தாள். அதனால்தான் அந்த பூமிக்கு அத்தனை மகத்துவம் உண்டுஎன்று கூறினாராம்.

ஆகவே வருடத்தின் அனைத்து தினங்களிலும் தர்ப்பணம் செய்யக் கூடிய அப்படிப்பட்ட மகத்துவமான பூமிக்கு இராமபிரான் சென்று தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்து பார்க்கலாம் எனக் கூற அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்ட இராமரும் இங்கு வந்து அங்கிருந்த நதியில் குளித்து விட்டு தனது தந்தைக்கு மட்டும் அல்லாது யுத்தத்தில் தனக்காக உயிர் நீத்த தனது தந்தையைப் போல இராமர் கருதிய ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்தது விட்டு பிண்டங்களை பிடித்து வைத்தார். என்ன அதிசயம். அந்தப் பிண்டங்கள் அப்படியே சிவ இலிங்கங்களாக மாறி விட்டன. அப்போது அசரீரியாக அவர் முன் தோன்றிய தசரதர், தான் அந்த பிண்டங்களைப் பெற்றுக் கொண்டு மன நிம்மதியுடன் செல்வதாகக் கூறி அவரை ஆசிர்வதித்தார். ஜடாயுவும் இராமர் முன் தோன்றி தானும் மகிழ்ச்சியுடன் பிண்டங்களை பெற்றுக் கொள்வதாகக் கூறியது.

அதைக் கண்டு பிரமித்துப் போன இராமரும் அந்த சிவலிங்கங்களை அங்கேயே வழிபட்டார். அதன் பின் இராமர் கூத்தனூர் ஆலயம் உள்ள இடத்தில் அந்தராத்மியாக இருந்த பிரும்மாவையும் வணங்கிய பின் அயோத்திக்குத் திரும்பிச் சென்றார். அவர் மனதில் பூரண அமைதி ஏற்பட்டு இருந்தது.
பிற்காலத்தில் கோதாவரி நதிக் கரையை ஆண்டு வந்ததாக கூறப்பட்ட ஒரு மன்ன இந்த பூமியில் எந்த இடத்தை சிறந்த பூமி என்று கருத முடியும் என நாரத முனிவரிடம் கேட்டபோது (சிலர் அந்த மன்னன் வாரணாசியை ஆண்டு வந்தவர் என்றும் கூறுகிறார்கள்) நாரதர் மேலே உள்ள கதையைக் கூறி எவருடைய ஆவி நேரிலே வந்து பிண்டங்களை பெற்றுக் கொள்ளுமோ அந்த இடமே சிறந்த பூமி என்பதினால் சிவபெருமான் தவம் செய்த, இறந்து போன முன்னோர்களுக்கு முக்தி தரும் அந்த தட்சிண பிரதேச பூமியே சிறந்த பூமிஎன்றார். ஆகவே யாராக இருந்தாலும் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய இங்கு ஒரு முறை வந்து தர்ப்பணம் செய்தால் போதுமானது என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது அங்கு ஓடிய நதி இல்லை என்றாலும் அதன் அருகில் உள்ள இடத்தில் வடக்கில் இருந்து தெற்காக ஓடும் அரசலூர் நதியே அந்த நதி என்றும், அந்த ஆலயத்தின் அடியில் கங்கை நதி ஓடுகிறது என்னும் ஐதீகமும் உள்ளது.

முன்னர் கூறியது போல தனது தற்கொலைக்கான தோஷத்தைப் போக்கிக் கொள்ள பார்வதி இங்கு வந்தாள். அங்கு வந்தவள் ஒரு மந்தார மரத்தை தான் கையால் நட்டபின், அந்த ஆற்றில் தினமும் குளித்துவிட்டு அந்த மந்தார மரத்தின் அருகில் அமர்ந்து கொண்டு சிவபெருமானுக்கு பூஜைகளை செய்துவிட்டு தவத்தில் இருப்பது உண்டு. அப்படியாகப் பல காலம் தவத்தில் இருந்தாள். (அப்போது அங்கு இந்த இரண்டு ஆலயங்களும் கிடையாது. அந்த பிரதேசம் ஒரு அடர்ந்த வனமாக இருந்தது) அந்த நேரத்தில் தான் குளிக்கச் சென்றபோது ஒரு மஞ்சள் உருண்டையை காவலுக்கு வைத்து விட்டு, அதனிடம் யாராக இருந்தாலும் தான் குளிக்கும்போது அவர்களை உள்ளே விடக் கூடாது என்ற கடுமையான உத்தரவு பிறப்பித்து விட்டுச் செல்வது உண்டாம். அந்த உருண்டை அவளுடைய மகனான விநாயகராக மாறி, காவலில் நிற்பது பழக்கமாம். அப்போது விநாயகருக்கு மனித முகமே இருந்தது.
ஒரு நாள் எப்போதும் போல அவள் மஞ்சள் உருண்டையை வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். அந்த நேரம் பார்த்து, தன்னை மீண்டும் வந்தடைய தன்னிடம் வேண்டிக் கொண்டு பார்வதி அந்த வனத்தில் தபம் செய்து கொண்டு இருப்பதை அறிந்து கொண்ட சிவபெருமான் அங்கு வந்தார். அப்போது பார்வதி குளித்துக் கொண்டு இருந்ததினால், தன்னுடைய தந்தையே ஆனாலும் சரி, எவரையும் விடக் கூடாது என பார்வதி கூறி இருந்ததினால் அவரையும் தடுத்து நிறுத்தினார் விநாயகர். அதைக் கண்டு கோபமுற்ற சிவன் அவர் தலையை வெட்டிச் சாய்த்தார். அது வடக்குப் புறமாக விழுந்தது. பிள்ளையார் கீழே விழுந்து விட்டார் . அதன் இடையில் குளித்து விட்டு வெளியில் வந்த பார்வதி நடந்ததைக் கண்டு பதறினாள். சிவனிடம் தனது மகனுக்கு மீண்டும் உயிர் பிச்சை தருமாறு வேண்டிக் கொண்டார். சிவனும் தன் நிலைக்கு வந்தார். தனது சிவகணப் படையிடம், உடனே சென்று அந்தப் பகுதியில் வடக்குக் புறத்தில் யார் தலை வைத்துப் படுத்து இருந்தாலும் அவர்களுடைய தலையை வெட்டி எடுத்து வருமாறுக் கூற, அந்தக் கட்டளையை ஏற்றுச் சென்ற சிவகணமும் ஒரு யானையின் தலையை எடுத்து வர, அதை கீழே விழுந்து கிடந்த பிள்ளையாரின் உடலில் வைக்க பிள்ளையார் யானை முகம் கொண்டு உயிர் பிழைத்து எழுந்தார்.

சிவபெருமான் பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டு, இனி வரும் காலத்தில் அந்த இடத்தில் மட்டும் ஆதி விநாயகர் என்ற பெயரில் விநாயகர் மனிதத் தலையுடன் காட்சி தந்து அருள் புரிந்து வருவார் என்றும் மற்ற இடங்களில் அவர் யானைத் தலையுடனே இருப்பார் என்றும், பார்வதி தன்னை வேண்டிக் கொண்டு தோஷத்தைக் களைந்து கொண்ட அந்த இடத்தில் வந்து தர்ப்பணம் செய்தால் காசிக்கு சென்றதற்கு சமானமாக அது இருக்கும் எனவும், தான் முக்திதரும் முக்தீஸ்வரராக பார்வதியுடன் காட்சி தந்து கொண்டு இருப்பேன் எனவும் அங்கு வருபவர்கள் ஆதி விநாயகரையும் வணங்கிச் சென்றால் மட்டுமே முக்தியும் அவர்களுக்கு கிட்டும் என்றும் கூறி விட்டு அதே இடத்தில் பார்வதியின் தோஷத்தை நீக்கிவிட்டு அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். இப்படியாகத்தான் அங்கு ஆதி விநாயகர் என்ற பெயருடன் மனிதத் தலையுடன் காட்சி தரும் விநாயகருக்கு ஒரு ஆலயம் அங்கு எழுந்தது. அதன் அருகிலேயே சுவர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயமும் அமைந்தது.

ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர இரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான். அதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்று கொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பின் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும் படி கட்டளையிட்டு நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார். பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்திற்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயிணியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்து கொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.

நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர்ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தைக் கைநீட்டி வாங்கிக் கொண்டார்களாம். அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

இராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் இலிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த இலிங்கங்களையும், இராமர், இலட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

இங்குள்ள ஆலயத்தில் சோமவல்லி சமேத முக்தீஸ்வரராக பார்வதி மற்றும் சிவ பெருமான் உள்ளனர். சிறிய கோயில். கிழக்கு நோக்கிய சன்னிதி. உள்ளே சென்றால் கொடி மரம், நந்தி. உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் சன்னிதி. வலப்பால் அம்பாள் சன்னிதி. பிரகாரத்தில் இராம இலக்குமணர்கள், அவர்கள் பிரதிஷ்டை செய்த இலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், நால்வர், பைரவர் தேவியருடன் பெருமாள் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் வினாயகர், தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்கை உள்ளனர். கோயிலுக்கு எதிரில் ஆதி வினாயகர் சிறிய கோயில் கொண்டுள்ளார். இவரைத் தவறாமல் தரிசிக்கவேண்டும். இங்கு வினாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு இடக்கால் மடித்து, வலக்கை சற்று சாய்ந்து அபயகரமாக விளங்க, அதிசயமான, அழகிய கோலத்தில் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தி இங்கு வித்தியாசமாக காணப்படுகிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கமும் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சி தருகிறார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். இராமராக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். இராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. மூலஸ்தானத்திற்கு பின்புறத்தில் இந்த இலிங்கங்களையும், தர்ப்பணம் செய்த இராமரையும் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். இராமரின் இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வம். இத்தலத்தில் பிதுர்வழிபாட்டுக்கு உகந்த தலமாக திகழ்கிறது.
மகாபாரதத்திலே ஒரு காட்சி வரும். குருக்ஷேத்ர யுத்தத்திற்கு முன்பு, தானே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் துரியோதனன், சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க செல்கிறான். “நான் போரில் வெற்றி பெற வேண்டுமானால் எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்என தனது எதிரியான சகாதேவனிடமே கேட்கிறான். சகாதேவன் உண்மையின் இருப்பிடம். கேட்பது எதிரியாக இருந்தாலும் சரியான தகவலை சொல்லிவிட்டார். பூரண அமாவாசை அன்று போரை தொடங்கினால் வெற்றி உறுதி என துரியோதனனிடம் சொல்கிறார். துரியோதனனும் அதே நாளில் களபலி கொடுக்கத் தயாராகிறான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்கிறார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்கிறார். இதைப்பார்த்த சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக ஓடிவருகின்றனர். “நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை. ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் செய்கிறீர்கள். இது சரியாகுமா?” எனக் கேட்கிறார்கள். மகாகிருஷ்ணன், “இப்போதுகூட நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள். எனவே இன்றுதான் அமாவாசைஎன சமயோசிதமாக பதில் சொல்லி விடுகிறார். துரியோதனன் சகாதேவன் சொன்னபடி களபலி கொடுக்கிறான். ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் வெற்றி நல்லவர்களான பாண்டவர்களுக்கே கிடைக்கிறது.

முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இக்கோயிலில் தினமும் அமாவாசையாகும். இதனை நித்ய அமாவாசைஎன்பர். பிரகாரத்தில் உள்ள துர்க்கை எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவள் இடது காலை பின்னோக்கி வைத்திருக்கிறாள். காலுக்கு கீழே மகிஷாசுரனும், பின்புறத்தில் சிம்ம வாகனமும் இருக்கிறது. நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், நாகர் தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.

இக்கோயிலுக்கு வெளியில் அழகநாதர் சன்னதி உள்ளது. இங்குள்ள லிங்கம் ராமரால் பிடித்து வைக்கப்பட்டது என்கிறார்கள். இங்குள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார்.

செதலபதி முக்தீஸ்வரர் கோயிலில் சுவர்ணவல்லி தாயார் காட்சி தருகிறார். சுவர்ணம் என்றால் தங்கம்என பொருள். தங்கத்தை வாங்கி குவிக்க வேண்டும் என விரும்புவோர் இங்கு வந்து அம்பிகைக்கு சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள். தங்கநகை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த அம்பிகையை வழிபடலாம். இந்த அம்பிகைக்கு பொற்கொடி நாயகிஎன்ற பெயரும் இருக்கிறது. இது மட்டுமின்றி இவ்வூரில் ஓடும் அரசலாறு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு வெளியே பின்புறத்தில் அழகீசர் கோயில் அழகனாதர் சன்னிதி ஒன்றுள்ளது. நகரத்தார் திருப்பணி பெற்றுள்ளது. நாடோரும் ஒருகால பூசை.

தேவாரப்பதிகம்:

பொடிகள் பூசிப் பலதொண்டற் கூடிப் புலர்காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அவ்வழகன்னிடம் கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி அடி கொள்சோலை மலர்மணம் கமழும் மதிமுத்தமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 58வது தலம்.

திருவிழா:

மாத அமாவாசைகளில் சிறப்பு பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை:

ஜாதகத்தில் தோஷம், பித்ருதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு முக்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மி. சரஸ்வதிக்கு கோவில் இருக்கும் கூத்தனூர் இங்கிருந்து அருகில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *