Category Archives: பாடல் பெற்றவை

பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை

அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம்.

+91- 98426 24580.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பால்வண்ணநாதர்
அம்மன் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கொள்ளிடம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கழிப்பாலை, காரைமேடு
ஊர் திருக்கழிப்பாலை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் இலிங்கத்தின்மீது பட்டு இலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட இலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு இலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,”முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த இலிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த இலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்என்றார்.

இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம்.

+91- 98426 24580.

காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 56 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர்
அம்மன் கனகாம்பிகை
தல விருட்சம் நெல்லி
தீர்த்தம் கிருபா சமுத்திரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெல்வாயில்
ஊர் சிவபுரி
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு வந்தார். தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, “அம்மா. அப்பாஎன அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தைக்குப் பால் கொடுக்குமாறு கூறினார். அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசிதீர்ந்த சம்பந்தர் வாயில் பால்வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, “பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயேஎனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்கக் கையை ஓங்கினார். சிவபார்வதி தரிசனம் தந்த திசையை நோக்கி, கையை நீட்டிய சம்பந்தர், “தோடுடைய செவியன்என்று பதிகம் பாடினார். தன் குழந்தைக்கு அம்பாளே பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார் சிவபாதர். சம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர். சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் உச்சிநாதர்என்றும் மத்யானேஸ்வரர்என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்மன் கனகாம்பிகை. இப்பகுதி மக்கள் இக்கோயிலை கனகாம்பாள் கோயில்என்று அழைக்கின்றனர். சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.