Category Archives: அநுமன்

அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம்

அருள்மிகு நரசிம்ம ஆஞ்சநேயர் திருக்கோயில், வரதராஜபுரம், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நரசிம்ம ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வரதராஜபுரம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமனின் தெய்வத் திருமேனியை சிலையாக வடிக்க விருப்பங்கொண்டு சிற்பியை நாடினார்கள். அவர் மும்முறை முயன்றும் நரசிம்மர் திருவுருவமே சிலையில் தென்பட்டிருக்கிறது. உடனே காஞ்சி மகாபெரியவரை அணுகி, விஷயத்தை கூறினர். சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்த அவர், வடிவமைக்கப்போகும் தெய்வத்திருமேனிக்கு நரசிம்ம ஆஞ்சநேயர் என திருநாமம் சூட்டுமாறு கூறி ஆசிர்வதித்தார். அதன்பின் வடிவமைக்கப்பட்ட சிலையில் நரசிம்மர் வடிவும் ஆஞ்சநேயர் வடிவும் ஒருமுக வடிவமாக இணைய நரசிம்ம ஆஞ்சநேயராக எழுந்தருளினார்.

முப்பத்திரண்டு அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இவ்வாலயத்தில் இலட்சுமி கணபதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.

அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்

அருள்மிகு கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 44-2489 5875, 3710 4183 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர சாதனைகளைப் புரிந்தவர் ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீஆஞ்சநேயர் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், கொஞ்சமும் மன சஞ்சலமில்லாமல் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் சிறப்பாகச் செய்து போய்க்கொண்டே இருப்பார். சாதனை புரிவதில் இவருக்கு நிகரானவர் இவரே! சமுத்திரம் எவ்வளவு பெரியது. அதைத் தாண்டி இருக்கிறார். சஞ்சீவி மலையை அடியோடு பெயர்த்தெடுத்திருக்கிறார். அந்த மலையை ஆகாயத்திலே தூக்கிக்கொண்டு பறந்து வந்திருக்கிறார். இலங்காபுரியையே எரித்துச் சாம்பலாக்கினார். ஸ்ரீராமபிரானையும் அன்னை சீதாதேவியையும் சேர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீராம சேவை என்றால், ஸ்ரீஆஞ்சநேயரைப் போல பயபக்தியுடன் அந்த பகவானுக்கு வேறு எவரும் அப்படிச் சேவை செய்திருக்க முடியாது. இவர் புத்திமான் மட்டுமல்ல. சிறந்த பக்திமான். சாந்த குணம் இருந்தது. கோபம் கிடையாது. இந்திரியங்களை அடக்கும் சக்தி இருந்தது. அதனால் எதனிடமும் மோகமில்லை. கூர்மையான அறிவு இருந்தது. அது நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தி ஒரு வைராக்கியமுடன் எந்த நேரமும் ஸ்ரீராம நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தவர்.