Category Archives: அநுமன்

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91 99433 81527 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப்படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, பிரதாப சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார். ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானதாகக் கர்ண பரம்பரை கதை வாயிலாக அறிய முடிகிறது. எனவே தான் இவருக்கு பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்கு மூலை அனுமார் என்று பெயர் வர ஒரு காரணம் உண்டு. தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகள் உள்ளது. மூலை அனுமார் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி தனக்கு கோயில் எழுப்பும்படி தஞ்சை மன்னனுக்கு ஆணையிட்டார். எனவே பக்தர்களால் மூலை அனுமார் என பெயர் சூட்டப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது. முகலாய படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது இந்த தலத்திலேயே சிலையை மறைத்து வைத்திருந்தனர். இராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான் பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோயில் அருகிலேயே கோயில் அமைக்கும்படி ஆணையிட்டார். ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் புகழ் பெற்றது. குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும், புதுமணத் தம்பதிகளும் இவர்களை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. பாம்பு, நிலவை கவ்வி பிடிக்க வருவது போன்ற சிற்பமும் இங்கு உள்ளது. இதை கண்டவர்களுக்கு இராகு,கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள வேப்பமரத்தை அம்பாளாகக் கருதுகின்றனர். அம்பாள் இராம நாமத்தை வேப்பமர வடிவத்தில் நின்று கேட்பதாக நம்பிக்கை.

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம்

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பஞ்சமுக அனுமன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கவுரிவாக்கம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது. இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.

பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.