தியானம், தவம் செய்ய

தியானம், தவம் செய்ய

ஒருவர் தன்னை வருத்தி முழு பக்தியுடன் இறைவனை நோக்கி தவம் செய்தால், அதற்கு இறைவன் கட்டுப்பட்டு வரம் வழங்குவான் என்பது நம்பிக்கை. தவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றால் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாகக் காரணமான சக்தி பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன்படுத்தலுமே தவம் ஆகும்.

சக்தி எங்கும் நிறைந்தே இருக்கிறது. நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் நிறைந்தே இருக்கிறது. அதை உணர்வதற்கு மனதை கடந்து செல்ல வேண்டும். நாம் நுண்ணிய மனோ நிலைக்குச் சென்று, பின் மனமே இல்லா நிலைக்குச் செல்ல வேண்டும்.

கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலங்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும். உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்கும் திறன் அதிகமாக இருப்பதைக் காணலாம். தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களைக் குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது. அங்கு நம்மிலும் நம்மைச் சுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த ஒரே சக்தி என உணர்கிறோம்.

முறைப்படி கற்றல்

தவத்தை கண்டிப்பாக ஒரு குருவின் உதவியுடனே கற்க வேண்டும். அவ்வாறன்றி தன்னிச்சையாகவோ நூல்களில் படித்தோ செய்யக்கூடாது. காரணம் நீங்கள் எதையாவது தவறாக செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஒருசிலர் தவறாக செய்துவிட்டு, யோகம் தவம் செய்ததால் எனக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்று பலரிடம் சொல்லி யோகம் தவத்தின் மேன்மை மக்களிடம் பரவுவதில் ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு சிலர் தானும் கெட்டு, பிறரையும் கெடுக்கும் நிலை ஏற்படுவதாலேயே குருவின்றி கற்றுக்கொள்ள கூடாது என்கின்றனர்.

யோகம் என்பது தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும். யோகத்தில் ஆசனம், பிராணயாமம் முக்கியமானதாகும்.

தவம் செய்ய நீண்ட நேரம் ஒரு நிலையில் அமரவேண்டும். அவ்வாறு அமர்ந்திருக்கும்போது உடலின் எந்த இடத்திலும் உறுத்தலோ வலியோ ஏற்படக்கூடாது. அவ்வாறு உறுத்தலோ வலியோ ஏற்பட்டால் தவத்தில் முழு மனமும் இலயிக்காது. தவம் செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் அமரும் முறையே ஆசனம் எனப்படுகிறது.

உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72000 நாடிகளின் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மூலத்திலிருந்து மூன்றாகப் பிரிந்து, பின்பு அவை பலகிளைகளாகப் பிரிந்து சக்தியை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது. அந்த முக்கிய மூன்று நாடிகளை இடகலை, பிங்கலை, சுழுமுனை (இவற்றை சந்திர கலை, சூரிய கலை, சுசும்னா) என்பர். இவை முதுகு தண்டில் முறையே இடது, வலது, நடு மையத்தில் கீழிருந்து மேலாக செல்கிறது. சாதாரணமாக நாம் மூச்சு விடும்போது இடது நாசித்துவாரத்தின் மூலமோ அல்லது வலது நாசித்துவாரத்தின் மூலமோ தான் காற்று செல்லும். இடது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது சக்தி இடகலை நாடியின் மூலமும், வலது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது சக்தி பிங்கலை நாடியின் மூலமும், இரண்டு நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது சக்தி சுழுமுனை நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. சக்தி சுழுமுனை நாடி வழியாக பரவும் போதுதான் நாளமில்லா சுரப்பிகள் நன்முறையில் செயல்பட்டு உடலில் (cosmic energy) வான் காந்த சக்தி கிரகிக்கப் படுகிறது. இதற்காகவே நாடிசுத்தி, தண்டுவட சுத்தி ஆகிய பிராணாயாம பயிற்சிகள் அவசியமாகிறது.

தியானம், தவம் இயற்ற மலை, ஆற்றங்கரை, கடல்கரை மற்றும் இறையாலயங்கள் ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. அதில் கீழ்கண்ட ஆலயங்களில் தவம் செய்தால் நல்ல ஆன்ம முன்னேற்றம் கிடைக்கிறது என்கின்றனர் அநுபவித்தோர். முயலுங்களேன்.

பாபாஜி

பரங்கிப்பேட்டை

கடலூர்

தத்தாத்ரேய சுவாமி

கொழுமம்,குமாரலிங்கம்

கோயம்புத்தூர்

திரவுபதி அம்மன்

ஐவர் மலை, பழநி

திண்டுக்கல்

சுவர்ணபுரீஸ்வரர் செம்பொனார்கோவில் நாகப்பட்டினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *