அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை, பழநி, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4545 – 260417 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரவுபதி(பாஞ்சாலி)
தல விருட்சம் வன்னி, வேம்பு
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திரபுஷ்கரிணி
முருகனுக்கு தனியாக பால்சுனை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் ஐவர்மலை
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

பஞ்சபாண்டவர்கள், தங்களின் வன வாசத்தின்போது பாஞ்சாலியுடன் இந்த ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள். இதனால்தான் இந்த மலை ஐவர் மலை என அழைக்கப்படுகிறது. “ஐவர் மலை இல்லை “ஆயிர” மலை என்பது தான் ஐவர் மலையில்உள்ள கல்வெட்டு கூறும் தகவல்” என்கிறார் ஒரு நண்பர்.

மேலும் பழனி மலை முருகன் சிலையை நவ பாஷாணத்தால் உருவாக்கியவரான போகர் இங்கிருந்து தான் முருகன் சிலையை செய்துள்ளார். அதாவது போகருக்கு பிரம்மகத்தி தோடம் பிடித்துக்கொண்டது. இந்த தோசம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேசுவரி அம்மன் தோன்றி, இந்த தோசம் போக வேண்டுமானால் நவபாஷாணத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து, அந்த முருகன் சிலையைப் பழனியில் வைத்து வழிபடும்படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பைத் தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.

இந்த போகர் புராண காலத்தில் நந்தியாக இருந்தவர். இதற்கான ஆதாரம் போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு, ஆகிய நூல்களில் உள்ளதாக இங்கு வசிப்போர் கூறுகின்றனர். அதே போல் இம்மலையிலுள்ள குழந்தை வேலப்பர் கோயிலுக்கும் தனி வரலாறு உண்டு.

பல வருடங்களுக்கு முன் நாராயண சுவாமியின் சீடர்களில் ஒருவரான முருகானந்தம் இந்த மலையில் வசித்த போது, இலட்சுமணன் என்பவருக்கு குட்ட நோய் ஏற்பட்டது.

ஐவர் மலையில் குழந்தை வேலப்பர் கோயில் கட்டி வழிபட்டால் குட்டம் தீரும் என முருகானந்தம் சுவாமி கூற, அதே போல் இலட்சுமணனும் கோயில் கட்டி வழிபடுகிறார். இதனால் இவருக்கிருந்த குட்டம் போய்விட்டது.

பழனி மலை முருகனைப் போகர் இந்த மலையிலிருந்து தான் உருவாக்கி பிரதிட்டை செய்துள்ளார். எனவே இந்த ஐவர்மலையை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.

ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்த தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது. அந்த சமயத்தில் சூரிய, சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக கூறுகிறார்கள். எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.

இந்த மலைக்கு வந்து வணங்கினால், பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள். மலைஉச்ச்யில் உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ளார்.

இப்படி உச்சிப்பிள்ளையார் அமைந்துள்ள இடத்தில் ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.

நிலம், நீர்(புஷ்கரிணி), காற்று, நெருப்பு(தீபம்), ஆகாயம்(மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம்) இப்படி பஞ்ச பூதங்களும் ஒரு சேர இங்கு சங்கமிப்பதால் ஆடி அமாவாசையில் இங்கு வந்து வழிபட்டால் பஞ்சபூத தலங்களுக்கும் ஒன்றாக சென்று வந்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சுமார் 150 வருடங்களுக்கு முன் நாராயணசாமி பரதேசி என்பவர் இந்த மலைக்கு வந்து பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் இங்கு தங்கியதை அறிந்து அந்த பாஞ்சாலிக்கு விக்ரகத்துடன் கூடிய கோயில் ஒன்றை நிறுவுகிறார். இவரது முக்திக்கு பின் சீடர் பத்மநாபா சுவாமிகளும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள்.

இவர்கள் வழியில் வந்த பலரும் இங்கேயே சமாதி ஆகிவிட்டர்களாம்.

இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நவகிரகங்கள் நீள் வட்ட பாதையில் தான் சுற்றுகின்றன என்பதற்கேற்ப இங்குள்ள நவகிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்ந்த சித்தர்: துவாபரயுகத்தில் போகர்.

கூன் பாண்டியன் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட சமணர்கள் இங்கு வந்து தங்கி தியானம் செய்து முக்தியடைந்து உள்ளனர்.

பழனியைப்போலவே இங்கும் இடும்பனுக்கென தனி சன்னதி உள்ளது.

திருவிழா;

மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை.

பிரார்த்தனை, யோகா, தியானம், தவம் மற்றும் மன அமைதி பெற விரும்புவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்லலாம்

அமாவாசை, கார்த்திகை, பவுர்ணமி நாட்களில் இந்த குழந்தை வேலப்பரை வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை.

One Response to அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை

  1. yokishivam.Ivarmalai says:

    குழந்தை வேலப்பர் கோயில் படம் தான் அது. அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில் என்பது தவறு மேலும் ஐவர் மலை இல்லை “ஆயிர” மலை என்பது தான் ஐவர் மலையில்உள்ள கல்வெட்டு கூறும் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *