சுக்கிரதோஷம் நீங்க

சுக்கிரதோஷம் நீங்க

சுக்கிரன் பிருகுவின் புதல்வன். அசுரர்களுக்கு குரு. எல்லாச் சாத்திரங்களையும் அறிந்தவன். வெண்தாமரை நிறமுடையவன். அனைத்து இன்பங்களுக்கும் வித்தானவன். அழகு ரசிகன். காதலின் அதிபதி. களிப்பூட்டுபவன். கற்பனையின் ஊற்று, காவியமானவன்.

மனம், மங்கை, அன்பு, ஆசையும் ஆகியவைகளும் இவனே கரகன். நடன மங்கையரை உருவாக்கி, நாடகக் கலைஞர்களைத் தோற்றுவித்தல், சினிமா, இசை, மற்றும் சினிமா தொடர்புள்ள கலைகள் அத்தனைக்கும் அதிபதி. ஒரு பெண்ணின் இளம் வயதில் யோகமுள்ள இவனது திசை வந்தால் அவள் அரம்பைபோல் இருப்பாள். ஓர் ஆணின் வாலிபப் பருவத்தில் இவனது ஆட்சி நடந்தால் அவன் கவர்ச்சியால் எல்லா இன்பங்களையும் நுகர்வான்.

பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, அதிர்ஷ்டம் அனைத்துமே சுக்கிரனால் வழங்கப்படும். வேலை செய்ய வேலயாட்கள் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் ஆதாயத்தை தருவான். வித்தைகளால் உலகத்தைக் கவர வைப்பான். கண்களில் பிரதிபலிப்பான். ஜனன உறுப்புகளைக் காப்போன். சிற்றின்பத்தை நுகரவைப்போன். காதலிலே வெற்றி தருவான். வாழ்க்கையின் வசதிகளை வாரி வழங்குவான். ஆடை ஆபரணங்களைத் தருபவன். நீர் நிலைகளில் சஞ்சரிப்போன். உடலில் வீரியம் இவன். புளிப்புச் சுவை உடையவன். பல நிறமுடையோன். ராஜஸகுனத்தோன். வாதம், கபம் இரண்டுக்கும் அதிபதி. வெள்ளி எனும் பெயர் பெற்றோன். வெள்ளி உலோகத்திற்கு இவனே அதிபதி. பஞ்சபூதங்களில் நீர். அந்தண இனத்தவன். வைரம் இவனுக்கே உரிய கல். ஆண் – பெண் பிரிவில் பெண். சுபக்கிரகம். குருவுக்கு அடுத்த நிலை பெறுபவன். நால்வகை உபாயங்களில் சாமத்திற்கு உரியவன். தென்கிழக்கு திசைக்குரியவன். ரிஷபம், துலாம், இரண்டும் சொந்த வீடுகள்; கன்னி நீச வீடு; மீனம் உச்சவீடு; பரணி, பூரம், பூராடம், என்ற மூன்று நட்சத்திரங்களுக்கு நாயகன்.

சனியும், புதனும் நண்பர்கள்; குருவும், செவ்வாயும், சமமானவர்கள்; மற்றையோர் பகைவர். மிருத சஞ்சீவினி மந்திரத்தால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி படைத்தவன். ஈசனிடம் அற்புதமான மந்திரங்கள் உபதேசம் பெற்றவன்.

சுக்கிரனை வழிபடுவதற்கென சில விதிமுறைகள் விசேடமாக உண்டு. பிருகு புத்திரன் என்பதால் பார்க்கவன் என்றும் – மேலும் கவி, வேத, வேதாங்க பாரகன், பிரபு என்றும் பல திருநாமங்கள் இவனுக்கு உண்டு. ஜாதகத்தில் களத்திர காரனான இவனது சுபபலத்தைத் கொண்டே வாழ்க்கைத் துணைவி, சுகயோகம் முதலான் முக்கிய அம்சங்கள் நிர்ணயிக்கப்படும்.

மகா பண்டிதன். நாட்டைக் கொடுப்பவன். சகல சாஸ்திர விற்பன்னன். தத்துவமேதை.

பொதுவாக ஒருவருக்கு செல்வம், செல்வாக்கு, பதவி, பட்டம் என்று பேசும்பொழுது ‘அவருக்கு என்னப்பா சுக்கிரதசை அடிக்குது; அதனால மண்ணைத் தொட்டாலும் பொன்னாகுது’ என்று சொல்வார்கள். இந்த எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால் சுக்கிரனால் மட்டும்தான் ராஜயோகம் கொடுக்க முடியுமா? மற்ற கிரகங்களால் தரமுடியாதா என்ற கேள்வி எழலாம். உண்மைதான், சுக்கிர தசை எல்லோருக்கும் ராஜயோகத்தை தராது. பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகளுடன் கோச்சரத்தை இணைத்துப் பார்க்கவேண்டும். சிலருக்கு சுக்கிர தசையில் பல இன்னல்களும், இடையூறுகளும், துன்பங்களும், அவமானங்களும் ஏற்படும்.

அவர்கள் கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நலம் தரும்.

அக்னீஸ்வரர் கஞ்சனூர் தஞ்சாவூர்
அக்னீஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர்
அக்னிபுரீஸ்வரர் அன்னியூர் திருவாரூர்
அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு திருவாரூர்
அக்னிபுரீஸ்வரர் திருப்புகலூர் திருவாரூர்
கொடுங்குன்றநாதர் பிரான்மலை சிவகங்கை
பக்தஜனேஸ்வரர் திருநாவலூர் விழுப்புரம்
மகரநெடுங் குழைக்காதர் தென்திருப்பேரை தூத்துக்குடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *