Category Archives: தூத்துக்குடி

அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்

அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், நவதிருப்பதி, திருத்தொலைவில்லி மங்கலம் – 628 752, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அரவிந்த லோசனர்
உற்சவர் செந்தாமரைக் கண்ணன்
தாயார் கருந்தடங்கண்ணி
தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருத்தொலைவில்லி மங்கலம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.

அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி

அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி – 628 612, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 7.30 முதல் 12 வரையிலும், மாலை 5.00 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்
உற்சவர் பொலிந்து நின்ற பிரான்
தாயார் ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் தாமிரபரணி, குபேர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆழ்வார் திருநகரி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றினார் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்ததைப் பார்த்த பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர். சடகோபரைக் கோயிலுக்கு அழைத்து வந்தனர். சடகோபர் ஓடிச்சென்று அங்கு இருந்த புளியமரத்தடியில் இருந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு அவரை அசைக்க முடியவில்லை. 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால், உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவியாழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால் மதுரகவிஆழ்வார் என புகழப்பட்டார். அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்தார் மதுரகவியாழ்வார். அந்த ஒளி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது. அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதைக் கண்டார் மதுரகவியாழ்வார்.
ஞான முத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார். “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்றார்.