Category Archives: திருநெல்வேலி

அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி

அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 462 – 233 5340 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வீரராகவர், வரதராஜர்

உற்சவர்

வரதராஜர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திருநெல்வேலி

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ண பரமராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜப்பெருமாளின் சிறந்த பக்தரான இவர், ஒருசமயம் தாமிரபரணியிலுள்ள பத்மநாபதீர்த்தத்தில் (குறுக்குத் துறை) குளித்துக்கொண்டிருந்த போது நீலநிறக் கல்லால் ஆன பெருமாள் சிலை கிடைத்தது. அதைத் தனியே கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தார். வரதராஜப் பெருமாள் என திருநாமம் சூட்டினார். ஒருமுறை எதிரி நாட்டு அரசர், கிருஷ்ணராஜ மன்னர் மீது போர் தொடுத்து வந்தார். சிலை கிடைத்த பிறகு பெருமாள் வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியதால், போரில் எதிரி மன்னரை எதிர்த்துப் போரிடத் தக்க படைபலமின்றி இருந்தார். தனது நாட்டு மக்களைக்காத்து அருள்புரிந்திடும்படி பெருமாளிடம் மனம் உருகி முறையிட்டார். அவரது முறையீட்டிற்கு செவிசாய்த்த பெருமாள், மன்னர் வேடத்தில் போர்க்களத்திற்கு சென்று எதிரிநாட்டுப் படை வீரர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றார். இவ்வாறு, மன்னருக்காக போர்க்களத்தில் வீரத்தளபதியாக அவதரித்து வந்த பெருமாளே இவ்விடத்தில் மூலவராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

ஒருமுறை வீரராகவரின் பக்தர் ஒருவர் தாமிரபரணி ஆற்றில் தனது மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு நீராடி, சுவாமியைத் தரிசனம் செய்ய வந்தார். அப்போது சுவாமியை நேரடியாக தரிசனம் செய்யவேண்டுமென அதீத ஆவல் எழுந்தது. பெருமாளோ வரவில்லை. எனவே, உண்ணாவிரதம் இருந்தார். ஒருநாள் சுவாமிக்கு உச்சிகாலை பூஜை நடந்து கொண்டிருந்தது. பக்தர் மயக்க நிலைக்குச் செல்ல இருந்த நிலையில், அவரது பக்திப்பெருக்கில் அகம் மகிழ்ந்த சுவாமி அவருக்கு காட்சி தந்து அருள்புரிந்தாராம். இவ்வாறு, பக்தனின் வேண்டுதலுக்கு இரங்குபவராக இத்தலத்தில் பெருமாள் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம்

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வெங்கடாசலபதி

உற்சவர்

வெங்கடாசலபதி

தல விருட்சம்

பனை மரம்

தீர்த்தம்

ஜடாயு தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திம்மராஜபுரம்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

தெலுங்கு மொழி பேசும் திம்மராஜா என்ற குறுநில மன்னர் திருநெல்வேலியின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர். ஏழுமலையானை அடிக்கடி தரிசிப்பதற்காக தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய கோயிலைக் கட்டி, ஏராளமான நிலங்களையும் வருமானத்துக்காக எழுதி வைத்தார். கோயிலில் வெங்கடாசலபதி பிரதிஷ்டை செய்யப்பட்டார். தன் பெயரால் கோயில் இருந்த பகுதிக்கு திம்மராஜபுரம்என்று பெயரிட்டார். தாமிரபரணி நதியை ஒட்டி கோயில் அமைந்தது. கோயில் அமைந்துள்ள பகுதியில் ஓடும் இந்நதி ஜடாயு தீர்த்தம்என பெயர் பெற்றது. அதுவே இக்கோயிலின் தீர்த்தமும் ஆகும். பிற்காலத்தில் உற்சவர் வெங்கடாசலபதி சிலை அமைக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவர் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலை தெலுங்கு மன்னர் கட்டியதால், வாசலில் கொடிக்கம்பத்திற்கு பதிலாக ஆந்திர மாடலில் தீப ஸ்தம்பம் உள்ளது.