Category Archives: காஞ்சிபுரம்

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91-44-2722 5242 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிகேசவப்பெருமாள்
தாயார் அலமேல்மங்கை, பத்மாஸனி
தீர்த்தம் கஜேந்திர புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு, இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன், மகாசந்தனின் தவத்தை கலைக்க, தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் யோகி அசையவில்லை. பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட்டமாக காடுகளில் திரியும் போது, சாளக்கிராமத்தில் நீராடியது. அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை, பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டுப் பரிகாரம் தேடியது. மிருகண்டு முனிவர் என்பவர் இதன் நிலை கண்டு வருந்தி,”காஞ்சிக்கு சென்று வரதராஜப்பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும்என்றார். அதன்படியே இந்த யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது. ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜப் பெருமாளைத் தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது. இவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14,000 மலர்களை பறித்துக் கொடுத்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது. ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலிருந்த குளத்திற்குச் சென்று பூ பறித்தது. அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது. பயந்து போன யானை அஷ்டபுஜப் பெருமாளை நோக்கி,”ஆதிமூலமேஎன அபயக்குரல் கொடுத்தது. முன்பொரு முறை கஜேந்திரனைக் காப்பாற்றிய ஆதிமூலம் இந்த முறையும் கருட வாகனத்தில் ஏறி வந்து, தனது சக்கரத்தினால் முதலையின் தலையை வெட்டி, யானையைக் காப்பாற்றினார்.

 

அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம்

அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்

திரேதா யுகத்தில் வாழ்ந்தவர் மகத்தான தவச்சிலரான விபண்டக மகரிஷி. ஸ்ரீ ராமபிரான், சீதாபிராட்டி, இளைய பெருமாளான இலக்குவனுடன் வனவாசம் செய்தபோது விபண்டக மகரிஷியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஸ்ரீராமனையும், ஸ்ரீஜானகியையும் தரிசித்த விபண்டகர், ஸ்ரீராமபிரானின் திருக்கல்யாண தரிசனத்தைப் பெறாமல் இருந்துவிட்டோமே என்று தன் மனத்திற்குள்ளேயே வருந்தினார். அதனைத் தன் திருவுள்ளத்தில் அறிந்த ராமபிரான் தான் மீண்டும் அயோத்திக்குத் திரும்பும்போது திருக்கல்யாண தரிசனம் தருவதாக வாக்களித்தார்.

ஸ்ரீ ராமபிரான் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது, மதுராந்தகம் திருத்தலத்திற்கு உயரே விமானம் நின்றதாகவும், அப்போது விபண்டக மகரிஷிக்கு ஸ்ரீராமர், ஸ்ரீசீதாபிராட்டியின் திருக்கரத்தைப் பற்றியவாறு இலக்குவனுடன் திருக்கல்யாண கோலத்தில் சேவை சாதித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.