அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம்

அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்

திரேதா யுகத்தில் வாழ்ந்தவர் மகத்தான தவச்சிலரான விபண்டக மகரிஷி. ஸ்ரீ ராமபிரான், சீதாபிராட்டி, இளைய பெருமாளான இலக்குவனுடன் வனவாசம் செய்தபோது விபண்டக மகரிஷியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஸ்ரீராமனையும், ஸ்ரீஜானகியையும் தரிசித்த விபண்டகர், ஸ்ரீராமபிரானின் திருக்கல்யாண தரிசனத்தைப் பெறாமல் இருந்துவிட்டோமே என்று தன் மனத்திற்குள்ளேயே வருந்தினார். அதனைத் தன் திருவுள்ளத்தில் அறிந்த ராமபிரான் தான் மீண்டும் அயோத்திக்குத் திரும்பும்போது திருக்கல்யாண தரிசனம் தருவதாக வாக்களித்தார்.

ஸ்ரீ ராமபிரான் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது, மதுராந்தகம் திருத்தலத்திற்கு உயரே விமானம் நின்றதாகவும், அப்போது விபண்டக மகரிஷிக்கு ஸ்ரீராமர், ஸ்ரீசீதாபிராட்டியின் திருக்கரத்தைப் பற்றியவாறு இலக்குவனுடன் திருக்கல்யாண கோலத்தில் சேவை சாதித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

இராமானுஜர் தனது ஆச்சாரியராகிய பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரமந்திர உபதேசம் என்ற வைணவ தீட்சையைப் பெற்றது இத்திருத்தலத்திலுள்ள மகிழ மரத்தின் அடியிலாகும். இக்காரணத்தால் மதுராந்தகம் த்வயம் விளைந்த திருப்பதிஎன்ற சிறப்புப் பெயராலும் பூஜிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பான்மையான திவ்ய தேசங்களிலும் ஸ்ரீமத் ராமானுஜர் திரிதண்டம், காஷாய வஸ்திரம் ஆகியவற்றுடன் காட்சியளிப்பார். ஆனால் மதுராந்தகம் திருக்கோயிலில் வெள்ளை வஸ்திரத்துடன் காட்சி தருகிறார்.

ஸ்ரீ பெரியநம்பிகள் தமது திவ்ய திருக்கரங்களால் ஆராதித்த கண்ணனையும், ஸ்ரீமத் ராமானுஜருக்குச் சாற்றிய சங்கு சக்கரங்களையும் இத்திருக்கோயிலில் தரிசிக்கலாம்.

மூலவர், நீண்டு நெடுதுயர்ந்த திருமேனியாய் காட்சி தருகிறார். ராவண சம்ஹாரம் முடிந்து இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் விரைவாகப் புறப்படும் அவசரக் கோலத்தில் திவ்யசேவை சாதிக்கிறார். உற்சவ மூர்த்தியின் அழகோ மிக நேர்த்தி. அன்னை ஜானகியின் திருக்கரம் ஸ்ரீராமபிரானின் வலக்கையைப் பற்றிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

சுமார் 250 வருடங்களுக்கு முன்பு நடந்த அரிய தெய்வீக நிகழ்ச்சி இது. மதுராந்தகம், இயற்கைவளம் நிரம்பிய அழகான சிற்றூர். காஞ்சியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் விளங்கும் இயற்கை எழில் நிரம்பிய புனிதத் தலமாக இன்றும் விளங்குகிறது மதுராந்தகம். மதுராந்தகன் என்ற சோழ மன்னன் அரசாட்சி செய்ததால் அதன் காரணப் பெயராக மதுராந்தகம் என்று புகழ்பெற்றது இவ்வூர் எனச் சரித்திரம் கூறுகிறது.

இவ்வூரில்தான் சரித்திரப் புகழ்பெற்ற ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில் விளங்குகிறது. திருக்கோயிலின் பின்புறம் உள்ளது மிகப் பெரிய ஏரி. என்றும் வற்றாத இப்பெரிய ஏரி இருப்பதால் நீர்வளமும், நிலவளமும் பெற்று, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். மழைக்காலத்தில் மிகப்பெரிய அளவில் நீர் நிரம்பி, கரை உடைந்து செழுமை வாய்ந்த பயிர்களும் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்த வழக்கமாகவே இருந்து வந்தது.

அக்காலத்தில் செங்கல்பட்டு கலெக்டராக இருந்து ஆட்சி செய்து வந்தவர். திரு.லயோனல் ப்ளேஸ்.

அப்போது ஒரு சமயம், மழைக்காலம் தொடங்கியது. ஏரியும் நிரம்பி வழிந்தது. ஏரியின் கரைகளைச் செப்பனிட்டு, கரைகள் உடைந்துவிடாமல் இருப்பதற்குப் பல்வேறு மராமத்து வேலைகளையும் செய்திருந்தனர். இருப்பினும் இடைவிடாது மழை பெய்துகொண்டே இருந்தது.

கலெக்டர் ப்ளேஸுக்குச் செய்தி போயிற்று. எந்த நிமிடமும் ஏரியின் கரை உடைந்து, ஊருக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை. ஊர்மக்கள் அனைவரும் கவலையுடன், எந்த நிமிடம் என்ன நேர்ந்துவிடுமோ என்ற பயத்துடன் இரவில் தூங்காமல் கண் விழித்து, திகிலுடன் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

நிலைமை மிகவும் மோசமாகப் போகவே, கலெக்டர் ப்ளேஸ், நிறைய ஆட்களுடன் ஏரிக்கரைக்கு வந்துவிட்டார். அக்காரிருளில் ஏரியை உற்று நோக்கிய கலெக்டர் நிலைமையை அறிந்து அதிர்ச்சியுற்றார். எந்த விநாடியும் ஏரி உடைந்துவிடலாம் என்ற நிலைமை.

ஆங்கிலேயராகப் பிறந்து, வளர்ந்தும், கலெக்டர் ப்ளேஸ், மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஜனகவல்லி சமேத ஸ்ரீகோதண்டராமப் பெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அத்திருக்கோயிலின் புராதனப் பெருமையையும், சக்தியையும், ஊர்மக்கள் அப்பெருமாளிடம் வைத்திருந்த அளவற்ற பக்தியையும் அவர் அறிந்திருந்தார். கலங்கியிருந்த ஊர்மக்களுக்கு, “கவலைப்படாதீர்கள். உங்கள் ஊர் ராமன் காப்பாற்றுவான்என்று தைரியம் சொல்லி, இடைவிடாமல் பெய்துகொண்டேயிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் அந்த ஏரிக்கரையின் மேல் நடந்து சென்றார் கலெக்டர். அவரது பாதுகாவலர்கள் எவ்வளவோ தடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் ஏரிக்கரையின் மீதே சுற்றி வந்தார். இந்நிலையில்தான் ஓரிடத்தில் கரை உடைந்தது. வெள்ள நீர் அந்த உடைப்பின் வழியாகப் பாய்ந்தது. அதைக் கண்ட கலெக்டர் ஒரு கணம் திகைத்துச் செய்வதறியாது நின்றுவிட்டார். மழையோ மேலும் மேலும் வலுத்துக்கொண்டேயிருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தது. தன்னையுமறியாமல் அவர் கண்கள் ஊர் பக்கம் திரும்பி, ஸ்ரீகோதண்டராமன் திருக்கோயில் விமானத்தின் மீது பதிந்தது. கண்களில் வெள்ளத்தின் விபரீதத்தைக் கண்ட அச்சமும், ஸ்ரீராமபிரானின் மீது வைத்த நம்பிக்கையும் கலந்து கண்ணீராகப் பெருகியது. ஊர்மக்களின் நலனில் உண்மையான கவலை கொண்டவர் அந்த ஆங்கிலேய கலெக்டர். சேற்றில் பதிந்த கால்களுடன் நின்றிருந்த கலெக்டர் ப்ளேஸ் துரையை வானத்தில் பளிச்சென்ற மின்னலும் மிகப்பெரிய இடியும் ஒருகணம் உலுக்கின.

கண்களைப் பறிக்கும் அம்மின்னலின் ஒளியில் காண அரிய காட்சி ஒன்றைக் கண்டார் கலெக்டர். உடைப்பெடுத்த இடத்தில் அழகான இரு மகாபுருஷர்கள் ஏரிக்கரையின் மீது நின்று, பெருக்கெடுத்துப் பாய்ந்தோடும் தண்ணீரை நோக்கி, அம்புகளை விட்டு அந்த உடைப்பை அம்புகளால் மூடிக்கொண்டிருப்பதை அவரால் காணமுடிந்தது. தன்னை மறந்து கூவினார் கலெக்டர். அடுத்த கணம் உடைப்பு அம்புகளால் அடைபட்டுவிட்டது.

பேரழகுடன் விளங்கிய அம்மகாபுருஷர்கள் எங்கே? எங்கே என்று திரும்பத் திரும்ப மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருந்தார் அவர்.” பேயெனப் பெய்த மழையும் நின்றுவிட்டது. பாதுகாவலர்களின் உதவியுடன் சேற்றில் நடந்து வந்து, கரையை அடைந்தார் ப்ளேஸ். அவரது மனம், அவர் கண்ட தெய்வீகக் காட்சியிலேயே திளைத்திருந்தது. அம்மகாபுருஷர்கள் மதுராந்தகம் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பேரழகுப்பெருமானான ஸ்ரீராமபிரானும், தம்பி இலக்குவனும் என்பதை உணர்ந்தார்.

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் ஏதோ ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்த ப்ளேஸுக்கு ஸ்ரீராமபிரான், ஸ்ரீஇலக்குவன் ஆகியோர் தரிசனம் கிடைப்பதற்கு அவர் எத்தகைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

அன்றுமுதல் மதுராந்தகம் ஸ்ரீ ராமபிரானுக்கு ஏரிகாத்த ராமர் என்ற பெருமை நிலைத்துவிட்டது!

பெறற்கரிய பேறு தனக்குக் கிட்டியதை எண்ணி மகிழ்ந்தார் ப்ளேஸ். எவருக்குக் கிட்டும் இத்தகைய தெய்வீக தரிசனம் என்பதை நினைத்து, நினைத்துப் பரவசமடைந்தார். இதற்கு நன்றிக்காணிக்கையாக இத்திருக்கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் ஏற்பட்டது அவருக்கு. அக்காலத்தில் பழுதுபட்டிருந்த ஸ்ரீஜனகவல்லி தாயார் சந்நிதியைத் தன் செலவிலேயே ப்ளேஸ் சீரமைத்துத் தந்தார்.

பெறற்கரிய இத்தகைய பாக்கியம் பெற்ற கர்னல் லயோனல் ப்ளேஸ், கி.பி. 1795ல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்தார். இன்றும் தாயார் சந்நிதியின் மேல் உள்ள கல்வெட்டில் கலெக்டர் லயோனல் ப்ளேஸ் என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அந்நியராக இந்தியா வந்தாலும் தமிழகப் புண்ணிய பூமியின் ஸ்பரிசம் பட்டதால் ஸ்ரீராமபக்தி ஏற்பட்டு அவருக்குக் கிடைத்தற்கரிய ஸ்ரீராம, இலட்சுமண தரிசனமும் கிடைத்தது.

தசரத மாமன்னருக்குப் புத்திர தோஷம் நீங்க புத்திரகாமேஷ்டி யாகம் செய்வித்த மகரிஷி ரிஷ்ய சிருங்கர் அவருடைய தந்தை விபண்டக மகரிஷி மற்றும் சுகமகரிஷி ஆகியோரது ஆசிரமம் இங்கு இருந்ததால் புத்திர பாக்கியம் பெறாதவர்கள், “நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு, குழந்தையை அதில் விட்டு எடுக்கிறேன்என்று பிரார்த்தனை செய்துகொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *