Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்– 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
தாயார் திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
தீர்த்தம் சந்திர புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருமணிக்கூடம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,”உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்எனச் சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேயத் தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாகச் சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாகக் காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.

அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில், திருநாங்கூர்

அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில், திருநாங்கூர் – 609 106., நாகப்பட்டினம் மாவட்டம்.+91- 4364 – 275 478 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன்
தாயார் வைகுந்த வல்லி
தீர்த்தம் லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி, விரஜா
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்)
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

இராமபிரான் அவதரித்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் ஸ்வேதகேது. நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். இவனது மனைவிக்கும் இவனுக்கும் மகா விஷ்ணுவை, அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஸ்வேதகேது அரசனானதால் தனது ஆட்சி கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய புறப்பட்டான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள்.

நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால் அங்கு யாரை தரிசிக்கத் தவம் இருந்தார்களோ அந்த வைகுண்டவாசனைக் காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்தபோது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள். வைகுண்டத்தில் விஷ்ணுவை தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு நாரதர்,”நீங்கள் இருவரும் கடுமையாகத் தவம் இருந்தாலும், பூமியில் தானதர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை. எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக பூமியில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி, முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்டப் பெருமாளின் தரிசனம் கிடைக்கும்என்றார்.