Category Archives: பாடல் பெறாதவை

கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்

அருள்மிகு கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435- 2460760.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கம்பகரேசுவரர், நடுக்கம் தீர்த்த நாயகன்
அம்மன் தர்மசம்பர்த்தினி, அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் சரபதீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புவனேசுரம்
ஊர் திருப்புவனம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

வரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்குச் செல்கிறான். அவனின் குதிரை வேகமாகச் செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர, குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப்பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது.

அதாவது பிரம்மகத்தி தோசம் பிடிக்கிறது. அது நீங்க, திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மகத்தி தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோசம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார்.

பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர்

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்), நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்

காலை 7.30 முதல் 12 மணிவரையிலும் மாலை 5.30 முதல் 8 மணிவரையிலும் இத்தல இறைவனை தரிசிக்கலாம்.

இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண உலகத்திலுள்ள அனைத்து சீவராசிகளும் திரண்டு வடக்கே சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது. உலகைச் சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், ”நான் உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்என்றார் சிவன். இதன்படி அந்த காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு இலிங்கத்தை வைத்துப் பூஜித்து பேறுபெற்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.

மாசி மகத்திற்காக கும்பகோண மகாகுளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நல்லூரில் உள்ள குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் தொற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி, நாரதரிடம் யோசனை கேட்க, ஏழு கடல்களில் சென்று நீராடினால் தோஷம் நீங்கும் என்கிறார். நான் பெண், என்னால் எப்படி ஏழுகடல்களில் சென்று நீராட முடியும், எனவே வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்கிறாள் குந்தி.