Category Archives: அட்டவீரட்டானம்

வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேசுவரர்
உற்சவர் அந்தகாசுர வதமூர்த்தி
அம்மன் பெரியநாயகி, சிவானந்த வல்லி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அந்தகபுரம், திருக்கோவலூர்
ஊர் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர்

பார்வதி ஈசனின் இரு(சூரியன், சந்திரன்) கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து, அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்). அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து இரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி, போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி ரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் இரத்தத்துளிகளை, கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட இரத்தம், இரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில், சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருக்க செய்கிறார். பின்னர், அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார்.

இதையே, இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோச நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.

அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து, பாரி வள்ளலின் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும், திருக்கோயிலூரை ஆண்ட தெய்வீக மன்னனுக்கு திருமணம் செய்து வைத்த சிறப்புடைய தலம் இது. இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.

வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம்.

+91-98419 62089

காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டானம், சம்கார மூர்த்தி
அம்மன் பெரியநாயகி, திரிபுர சுந்தரி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் சூலத்தீர்த்தம், கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்
ஊர் திருவதிகை
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து, “தங்களை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாதுஎன்று பிரம்மாவிடம் வரம் பெற்றனர். அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன்(அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து, அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால்தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.

தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால்தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க, சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார். அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். ஈசன், ஒரே சமயத்தில் தேவர்கள், அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.