வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேசுவரர்
உற்சவர் அந்தகாசுர வதமூர்த்தி
அம்மன் பெரியநாயகி, சிவானந்த வல்லி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அந்தகபுரம், திருக்கோவலூர்
ஊர் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர்

பார்வதி ஈசனின் இரு(சூரியன், சந்திரன்) கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து, அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்). அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து இரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி, போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி ரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் இரத்தத்துளிகளை, கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட இரத்தம், இரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில், சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருக்க செய்கிறார். பின்னர், அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார்.

இதையே, இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோச நிவர்த்தி ஆகும். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.

அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து, பாரி வள்ளலின் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும், திருக்கோயிலூரை ஆண்ட தெய்வீக மன்னனுக்கு திருமணம் செய்து வைத்த சிறப்புடைய தலம் இது. இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது.

சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக உள்ளாராம். எனவே பில்லி சூன்யம்,வைப்பு போன்ற தோசங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம். சந்நிதியின் பிரகாரத்தில் இருக்கும் இந்த அம்மன் இங்கு சிறப்பு பெற்றவர். சாந்த சொரூபியாக நமக்கு இருப்பது போலவே, கண்கள் இருபுறமும் வெள்ளையாகவும், நடுவில் கருப்பு கருவிழியுடனும் சாந்தமாக சிரித்த முகத்துடன் இயற்கையாக இருப்பது போலவே இருக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது. கஷ்டங்கள் நீங்கும். வேலை வாய்ப்பு தடை கல்யாணத் தடை ஆகியவை விலக விசேடமாகப் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. எலுமிச்சம் பழ விளக்கு பூஜை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இராகு கால பூஜை செய்கிறார்கள்.

சுந்தரர், சேரமான் இருவரும் வான்வழியாகக் கயிலை செல்லும்போது, அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். தானும் கயிலை செல்ல எண்ணி, அவசரமாக பூஜை செய்தாராம். உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். “சீதக் களபஎனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி பூஜை செய்து முடித்தார். சுந்தரர், சேரமான் ஆகியோர் கயிலை சென்றடையும் முன்பே, விநாயகர் விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை கயிலையில் சேர்த்தார். அந்த கணபதிதான் இவர். இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானைக் கணபதி என்று பெயர் பெற்றார்.

முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். ஏற்ற இடம் எந்த இடம் என்று உணர்த்த அம்பாள், தன் கையிலிருந்த வேலை எறிந்தாள். திருக்கையிலிருந்து வேல் விழுந்ததால், இந்த இடம் திருக்கை வேலூர்என்றாயிற்று. அதுதான் திருக்கோவிலூர்.” முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது. சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது. அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது. இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றவர்.

அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையனாதும் வரலாற்றுச் சிறப்பு பெற்றதுமான 2 வது வீரட்டான திருத்தலம் இது.

தேவாரப்பதிகம்:

உள்ளத்தீரே போதுமின் உறுதியாவது அறிதிரேல் அள்ளற் சேற்றில் காலிட்டிங்கு அவலத்துள் அழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனில் வெள்ளத்தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.

சம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:

மாசிமகம் – 10 நாட்கள் பிரம்மோற்சவம்.

கார்த்திகை – 3 ம் சோம வாரம் சங்காபிசேகம். ஆடிவெள்ளி கிழமைகள் விசேடம்.

புரட்டாசி நவராத்திரி.

ஐப்பசி மாதம் அன்னாபிசேகம், கந்த சஷ்டி உற்சவம், சூரசம்காரம்.

மார்கழி மணிவாசகர் உற்சவம் திருவாதிரை உற்சவம், ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை விழா நாட்கள் ஆகும்.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். பூர்வஜென்ம பாவங்கள் விலகும்.(வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலகும். பாவ தோசங்களும் விலகும். காரியத் தடைகள் நீங்கும். வீடுகட்டுவதற்கான தடைகள் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும்.(வாஸ்து ஐதீகம் தோன்றியதே இத்தலத்தில்தான்). சுக்கிரன் சாபவமோசனம் பெற்ற தலம் ஆதலால் திருமணத்தடை விலகும்.

நேர்த்திக்கடன்:

புத்தாடை சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம் செய்யலாம். அம்பாளுக்கு புடவை சாத்தலாம். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *