Tag Archives: சிதம்பரம்

அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 98653 44297

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அனந்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்தரநாயகி
தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தில்லைவனம்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமாலைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேடன். ஒருசமயம் வழக்கத்தைவிட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேடன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார். ஆதிசேடன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேடன் பூலோகத்தில் அத்திரி முனிவர், அனுசுயா தம்பதியரின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து பூசித்தார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால், “அனந்தீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. பின், நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.

அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம் – 608 001, கடலூர் மாவட்டம்.

+91- 4144 – 230 251 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தில்லைக் காளி, பிரம்ம சாமுண்டீசுவரி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது.

ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி, உக்ர குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு சமயத்தில் பெற்று இருந்த சாபத்தினால், சிவபெருமானைப் பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு திருவிளையாடலை நடத்தத் துவங்கினார்.


அதற்கேற்ப ஒரு முறை கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை. சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக, சினமுற்ற சிவபெருமான், பார்வதியைக் கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் கொடுத்து விடுகிறார்.

சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி, அழுது புலம்பி, தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டார். பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க, அதற்கு, சிவபெருமான் கூறினார்: “இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காகப் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். பிறகு, நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து, என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். நான் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்என்றார். அவ்வாறே அவள் செய்தாள்.

காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வரலானான். தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க, அவர் காளி உருவில் இருந்த பார்வதியை, தாரகாசுரனை வதம் செய்ய அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசுரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால், அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறிபிடித்தவள் போல் ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.