அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 98653 44297

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அனந்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்தரநாயகி
தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தில்லைவனம்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமாலைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேடன். ஒருசமயம் வழக்கத்தைவிட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேடன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார். ஆதிசேடன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேடன் பூலோகத்தில் அத்திரி முனிவர், அனுசுயா தம்பதியரின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து பூசித்தார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால், “அனந்தீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. பின், நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.

பதஞ்சலி முனிவருக்கு இங்கு தனிச்சன்னதி உள்ளது. பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது, லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலியே ஆவார். இவரது நட்சத்திரம் பூசம் என்பதால், இந்நாளில் விசேட பூசை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று நடராஜருடன் பதஞ்சலி முனிவரும் புறப்பாடாவார். யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி என்பதால், யோகாசன கலையில் தேற விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இக்கோயிலிலுள்ள சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. நாக தோசத்தால் பாதிக்கப்பட்டோர் தோசம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறமாக அமைந்த கோயில் இது. கோயிலுக்குள் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜசண்டிகேஸ்வரர் இருக்கிறார். ராஜ யோகம் கிடைக்க இவரையும், செல்வம் பெருக அருகிலுள்ள வடக்கு நோக்கிய இந்த விநாயகரையும் வணங்குகின்றனர். பிரகாரத்தில் அருகருகில் சூரியன், சந்திரன் உள்ளனர். எனவே, இத்தலத்தை நித்ய அமாவாசை தலமாகக் கருதுகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பித்ரு தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்கு சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர்.

திருவாரூர் தவிர, உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலுள்ள சுவாமிகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். எனவே, நடராஜர் கோயிலில் நடக்கும் அர்த்தஜாம பூஜை (இரவு 10 மணி) மிகவும் விசேஷம். இப்பூஜையை தினமும் அனைத்து முனிவர்களும் வந்து தரிசிப்பதாக ஐதீகம். இவர்கள் தினமும் உச்சிக்காலத்தில் இங்கு அனந்தீஸ்வரரை தரிசனம் செய்வதாக தலவரலாறு சொல்கிறது. எனவே, உச்சிக்காலத்தில் இத்தலத்தையும், அர்த்தஜாமத்தில் சிதம்பரம் நடராஜரையும் தரிசிப்பது விசேஷம். இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார்.

கோயில் முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர், தலைக்கு மேலே வாலை வைத்து வணங்கியபடி காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகம், பைரவர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் வல்லபை கணபதி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர்.

திருவிழா:

ஆனித்திருமஞ்சனம், நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி

கோரிக்கைகள்:

நாக தோசத்தால் பாதிக்கப்பட்டோர் தோசம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர். ராஜயோகம் கிடைக்க சண்டிகேஸரையும், செல்வம் பெருக விநாயகரையும் வணங்குகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பித்ரு தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்குள்ள சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர். வாழ்வில் மங்கலம் உண்டாக, கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமைய இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கைக்கு மஞ்சள் புடவை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *