Monthly Archives: December 2009

சண்முகநாதப் பெருமான் – குன்றக்குடி

சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியன் மன்னன் பெரிய மருதுவுக்கு முதுகில் “இராசபிளவை” என்னும் கடுமையான கட்டி வந்தது. அப்பொழுது குன்றக்குடியில் உப்பு வணிகம் செய்து வந்த காடன் செட்டியாரை அணுகினார். அவரும் குன்றக்குடியானை மனதில் வேண்டி விபூதி கொடுத்தார். பெரிய மருதுவின் துன்பம் நீங்கியது. அன்றிலிருந்து குன்றக்குடி சண்முகநாதப் பெருமானின் மீது அளவற்ற பக்திகொண்டான். குதிரையி வரும்பொழுது எந்த இடத்தில் கோயில் தென்படுகிறதோ, அதே இடத்தில் குதிரையை விட்டு இறங்கி கோயில் வரை நடந்தே வருவாராம்.

மயில் படுத்து அடைகாப்பதைப்போன்ற மலையின்மீது பெருமானுக்குத் திருக்கோயில் எழுப்பினான். மலையின் சுற்றளவு 1 கல் தொலைவு. கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மலையேறும் படிகள் மயிலின் தோகை போலிருக்கும். ஒட்டுமொத்தமாய், முருகனின் வாகனமே அவனிருக்கும் மலையாக இருப்பதே குன்றக்குடியின் விதப்பு. மலையின் 120 படிகளும் கல்வெட்டுக்கள்தான். நேர்த்திக்கடனுக்காகப் பக்தர்கள் செதுக்கியவைகள்.

அருள்மிகு நரசிங்கர் – சிங்கர்குடி

“திருமலாபுரம்” எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் “சிங்கர்கோயில்” இன்று “சிங்கர்குடி” என விளங்குகிறது.

கடலூரிலிருந்து புதுவை செல்லும் வழியில் 13 கல் தொலைவில் உள்ள தவளக்குப்பத்தின் மேற்கே 2 கல் தொலைவில் உள்ளது.

சீற்றமே வடிவான உக்கிர நரசிங்கர், தன் பக்தனான பிரகலாதனுக்காக சிங்கர்குடிக்குத் தானே வந்தமர்ந்து காட்சி தருகிறார்.

நிமிச் சக்கரவர்த்தி யாகங்கள் பலவும் நடத்தியதால் அவனுக்கு விண்ணோர் வரமளிக்கவும் சாபமிடவும் வல்லமையைக் கொடுத்தனர். இந்திர யாகம் செய்ய நினைத்த நிமி தன் குலகுருவான வசிட்டரிடம் சென்று நடத்தித் தருமாறு வேண்டினான். அந்நாளில் முன்னமேயே வேறு இடத்தில் யாகம் செய்ய ஒப்புக்கொண்டதால், “யாரையேனும் வைத்து செய்துகொள்; வந்து ஆசி தருகிறேன்” என்றார் வசிட்டர். நிமி, கவுசிக முனிவரை வைத்து யாகத்தை முடித்துவிட்டுக் களைப்பில் அயர்ந்து உறங்கும் வேளையில் வந்தார் வசிட்டர். தன்னை வரவேற்க நிமி வராததும், தன் எதிரியான கவுசிகனை வைத்து யாகம் நடத்தியதாலும் சினமுற்ற வசிட்டர், “நிமியே! உன் உயிர் உடலற்று அருவமாக உலவுதாகுக!” என சாபமிட்டார். அதற்கு நிமியும்,”உறங்குபவனைச் சபித்தல் முனிவருக்கு அழகல்ல; என்னைப்போல் நீங்களும் ஆகுக!” என பதிலுக்குச் சபித்தான். நிமிக்குச் சாபம் நீங்க யாகம் செய்யப் பல முனிவர்கள் முன் வந்தனர். ஆயினும், நிமி, “நான் இப்படியே உலகில் உள்ள எல்லோர் விழிகளிலும் இருந்து பெருமாளைத் தரிசனம் செய்தால் போதும்” என்றான். வசிட்டர், பிரமனின் அறிவுரைப்படி சிங்கர்குடி சென்று தவமியற்றிச் சாப விமோசனம் பெற்றார்.