சண்முகநாதப் பெருமான் – குன்றக்குடி

சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியன் மன்னன் பெரிய மருதுவுக்கு முதுகில் “இராசபிளவை” என்னும் கடுமையான கட்டி வந்தது. அப்பொழுது குன்றக்குடியில் உப்பு வணிகம் செய்து வந்த காடன் செட்டியாரை அணுகினார். அவரும் குன்றக்குடியானை மனதில் வேண்டி விபூதி கொடுத்தார். பெரிய மருதுவின் துன்பம் நீங்கியது. அன்றிலிருந்து குன்றக்குடி சண்முகநாதப் பெருமானின் மீது அளவற்ற பக்திகொண்டான். குதிரையி வரும்பொழுது எந்த இடத்தில் கோயில் தென்படுகிறதோ, அதே இடத்தில் குதிரையை விட்டு இறங்கி கோயில் வரை நடந்தே வருவாராம்.

மயில் படுத்து அடைகாப்பதைப்போன்ற மலையின்மீது பெருமானுக்குத் திருக்கோயில் எழுப்பினான். மலையின் சுற்றளவு 1 கல் தொலைவு. கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மலையேறும் படிகள் மயிலின் தோகை போலிருக்கும். ஒட்டுமொத்தமாய், முருகனின் வாகனமே அவனிருக்கும் மலையாக இருப்பதே குன்றக்குடியின் விதப்பு. மலையின் 120 படிகளும் கல்வெட்டுக்கள்தான். நேர்த்திக்கடனுக்காகப் பக்தர்கள் செதுக்கியவைகள்.

கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், தொண்டி, மீமிசல், திருவாடனை, தேவிபட்டினம் போன்ற கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்களின் மனதில் உறையும் தெய்வம் சண்முகநாதப் பெருமான். திருவாடனை அருகேயுள்ள விசும்பூர் கிராமத்திற்கும் குன்றக்குடிக்கும் 60 கல் தொலைவு. விசும்பூரில் கோயில் இல்லை. அவ்வூரில் உள்ளவர் அனைவருக்கும் குன்றக்குடியான்தான் குலதெய்வம். பங்குனி உத்திரத்தன்று ஒட்டுமொத்தக் கி்ராமமும் குன்றக்குடி வரும். அக்கினிக் காவடி, பறவைக் காவடி, பால்காவடி, தேர்க்காவடி, இழுவைக்காவடி ஆகியவைகள் சுமந்து வரும் பக்தர்கள் காணக் கண் கோடிவேண்டும். பயிரிட்டவர்கள் விளைச்சலில் ஒரு பகுதியை வைக்கோலுக்குள் வைத்து உருண்டையாகக் கட்டித் தலையி சுமந்து வந்து செலுத்தும் “கோட்டைக் காவடி”யை இங்கு மட்டுமே காணவியலும்.மருதுபாண்டியர் சண்முகநாதனுக்கு ஊருலவர் (உற்சவர்) உருவம் செய்யப்பணித்தான். சிற்பியிடம் சிறுவனாக வந்து சண்முகநாதன் குடிக்கத் தண்ணீர் கேட்க, சினத்திலிருந்த சிற்பி, அருகில் சூடாக காய்ச்சி வைத்திருந்த உலோகக் கலவையைக் குடிக்குமாறு பணித்தான். அதைக் குடித்த சிறுவனே ஊருலவராக மாறியதாக ஊரிலுள்ளோர் கூறுகின்றனர்.

விழாக்காலத்தே திருவீது உலாவரும் தங்க இரதம், வெள்ளி இரதம் ஆகியவற்றை இரு காளைகள் இழுத்து வரும். அவைகள் இறந்துபட்டால் சண்முகநாதப் பெருமான் பாதரக்குடி கிராமத்தில் உள்ளவர்களின் கனவில் வந்து, இன்ன ஊரில் இன்னாரிடம் உள்ள காளைகளை வாங்கி வா” என உத்தரவிடுவாராம். அப்படியே சென்று வாங்கிவந்து கோயிலுக்குத் தரும் பழக்கம் இன்னமும் தொடர்ந்து வரும் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *