Category Archives: சென்னை

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், நங்கநல்லூர்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் நங்கநல்லூர், சென்னை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து, அவர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புனிதப் பணியினை செய்து வந்தார் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். நாளடைவில் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்று செய்ய எண்ணம் கொண்டார். அதன்படி பக்தர்களின் கைங்கரியத்தால் ஐயப்பன் விக்ரகம் செய்யப்பட்டு பல வருடங்களாக குருசாமியின் இல்லத்திலேயே ஐயப்ப பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வந்தன. அழகான ரூபத்தில் அமைந்த ஐயப்பனுக்கோ தான் ஒரு தனிக் கோயிலில் அமர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க, பலரது எண்ணத்திலும் அது எதிரொலிக்க, தனிக் கோயில் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் வேறு பகுதியில் இடம் பார்த்து கோயில் கட்ட ஆரம்பிக்க, என்ன காரணத்தினாலோ அது தொடரமுடியாமல் போனது. உடனே குருசாமி சபரிமலையிலுள்ள மேல்சாந்தியை சந்தித்து விவரம் கூற பிறகு தேவபிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. தேவபிரச்னத்தில் ஐயப்பனே வந்து தாம் கோயில் கொள்ள விரும்பும் இடம் பிருங்கி முனிவர் தவமிருந்த சேத்திரம், அகத்தியர் வலம் வந்த பூமியென்றெல்லாம் கூற, அப்படி பிரச்சனத்தின் மூலமாக ஐயப்பன் வந்து அமர்ந்த இடம்தான் நங்கநல்லூர்.

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம்

அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், கவுரிவாக்கம், சென்னை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பஞ்சமுக அனுமன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கவுரிவாக்கம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது. இதனையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.

பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.