Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

+91- 4332 – 267 586 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நல்லாண்டவர் என்ற மாமுண்டி
தல விருட்சம் காட்டு மின்னை மரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் மணப்பாறை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

மாயமானை இராமர், “பூண்டிய” (சாய்த்த) இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது.

மந்திர ஆற்றலும், வலிமை படைத்த வீரராகவும் விளங்கியவர் மாவீரர் மாமுண்டியரசர். இவர் கருணை உள்ளத்துடன் இப்பகுதியின் தலைவராக நீதி ஆட்சி செய்ததுடன், கள்வர் கூட்டத்திலிருந்தும் மிருகங்களிடமிருந்தும் இப்பகுதி மக்களை காத்து வந்தார்.ஒரு முறை இத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வடபகுதியில் உள்ள குளத்தில், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிமார்களும் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கயவர் கூட்டத்தை சேர்ந்த பலர் இவர்களைத் துன்புறுத்தினர். இந்த கயவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி கதறினர். இவர்களின் கதறலைக்கேட்ட மாமுண்டியரசர் உடனே குதிரை மீது வந்து இவர்களை காப்பாற்றினார்.

சரியான நேரத்தில் வந்து எங்களது அண்ணன் போல் காப்பாற்றினீர்கள். எனவே உங்களை நல்லண்ணன் என அழைப்பார்கள்என நன்றிப்பெருக்குடன் வணங்கினர். அன்றிலிருந்து நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா, மாமுண்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார். நல்லாண்டவரின் வாகனமாக யானையும், காவல் தெய்வமாக புளிகருப்பண சுவாமியும், வாகனமாக குதிரையும் உள்ளது.

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில்

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 4652- 232 420, 94439 92216

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகராஜர்
தலவிருட்சம் ஓடவள்ளி
தீர்த்தம் நாகதீர்த்தம்
ஆகமம் சைவம், வைணவம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நாகர்கோவில்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், “நாகர்கோவில்என பெயர் வந்தது. தமிழகத்தில் நாகர் (பாம்பு) வழிபாட்டிற்கென அமைந்த பெரிய கோயில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.

சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார், விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது. புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை. அதாவது தான் எதில் இருந்தாலும், அதைத் தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன், பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.