Category Archives: சப்தவிடங்கத் தலங்கள்

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால், புதுச்சேரி.

+91 – 4368 – 236 530, 94433 30503 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
அம்மன் பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தல விருட்சம் தர்ப்பை
தீர்த்தம் நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம், அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம், அஷ்டதிக்பாலகர் தீர்த்தம் முதலான 8 தீர்த்தங்கள்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநள்ளாறு
ஊர் திருநள்ளாறு
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அல்லல்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரன்என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்(திருமறைக்காடு), நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4369 -250 238 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள், வீணாவாத விதூஷணி
தல விருட்சம் வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் வேததீர்த்தம், மணிகர்ணிகை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமறைக்காடு
ஊர் வேதாரண்யம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

வடமொழி வேதங்கள் ரிக், யசூர், சாம, அதர்வணம் என்ற நான்கும் மனித உருக்கொண்டு, இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி, அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலர் எடுத்து இத்தலத்து இறைவனைப் போற்றி வழிபாடுகள் செய்தன. கலியுகம் பிறந்தவுடன், “இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை. இனி நாங்கள் இருப்பது நல்லதல்லஎன்று இறைவனிடம் கூறிவிட்டு இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்து விட்டுச் சென்று விட்டன. இன்றும் இத்தலத்தை சுற்றிலும் மரம், செடி, கொடி என்று வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டி வாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரப்பதிகம் பாடி கதவை திறந்தனர் என்பதும், வேதங்களே இறைவனை வணங்கியதால் வேதாரண்யம்என்று பெயர் வந்தது என்பதும் தலவரலாற்றுச் செய்தி.

சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றிப் பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர். அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர். இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர். உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார். அதைக்கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர்மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர், “சம்பந்தரே! இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும்என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறைஎன்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக்கொண்டது. இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.