Category Archives: ஐயனார்

அருள்மிகு நீர் காத்த ஐய்யனார் திருக்கோயில், இராஜபாளையம்

அருள்மிகு நீர் காத்த ஐய்யனார் திருக்கோயில், இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல், மாலை மணி 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நீர்காத்த அய்யனார்
அம்மன் பூர்ணா, புஷ்கலா
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராஜபாளையம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

வெகு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு இருந்து வந்தாலும், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் அமைக்க முதலாம் ராஜராஜ சோழன் ஏற்பாடு செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அய்யனார் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோயிலும் அந்த காலக்கட்டத்தில் கட்டப்பட்டது தான்.

பராக்கிரம பாண்டியன் என்பவனது ஆட்சியில் நாட்டின் மேற்குப்பகுதியான இந்த அய்யனார் கோயில் பகுதியை கேரள பந்தள தேச மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அவனை விரட்டியடிக்க பாண்டிய மன்னன், சின்னையா தேவன் என்பவனது தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தான். அந்த வீரர்கள் மதுரையிலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை சென்று பந்தள மன்னனின் படைகளை விரட்டி அடித்தனர். இதன்பின் பாண்டிய மன்னனின் படைவீரர்கள் தங்களது நாடு திரும்ப அய்யனார் கோயில் அருகே உள்ள ஆற்றின் வழியாக வரும்போது, திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கி கொண்ட பாண்டிய படை வீரர்கள் தங்களை காத்து அருளும்படி அய்யனாரை வேண்டிக் கொண்டனர். அப்போது ஆற்றின் கரையில் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென கீழே விழுந்து ஆற்றை கடக்க உதவும் பாலம் போல இருந்தது. பாண்டியன் படைவீரர்களும் அந்த ஆற்றின் குறுக்கே விழுந்த மரத்தின் மேல் நடந்து உயிர் தப்பினர். இவ்வாறு நீரை காத்து பாண்டியன் படையை காத்ததால் இந்த அய்யனார் நீர் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டார்.

அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், காயாமொழி

அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், காயாமொழி, தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கற்குவேல் அய்யனார்
அம்மன் பூரணை, புஷ்கலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காயாமொழி
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளைக் கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்டினர். அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தார். தானே விரட்டிச் சென்று தண்டனையம் கொடுத்தார் அய்யனார். இந்த அற்புத நிகழ்ச்சியை இன்றும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி என்று அப்பகுதி மக்கள் நடத்தி வருகிறார்கள். இயற்கை வளம் மிகுந்த இந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது. அந்த மரத்தில் தோன்றிய அய்யனார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதால் கற்குவா அய்யன் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கற்கு வேலப்பன், கருக்குவாலை அய்யன், கற்கோலய்யன் என்றழைக்கப்பட்டு, தற்போது கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாதம் ஆறுநாட்கள் நடைபெறும் அய்யனார் விழாவில், கடைசி நாளாக நடைபெறும் கள்ளர் வெட்டு வைபவத்தைக் காண அண்டை மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர்.