Category Archives: ஐயனார்

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார்

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91 4634 250 209 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் பாணதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரையார்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, இலிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த இலிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு இலிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன். இதில் மரியாதைக்காக ஆர் விகுதி சேர்ப்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால் இவர் சொரிமுத்து ஐயனார்எனப்பட்டார். பொதிகை மலை மீதுள்ள இந்தக் கோயிலில், ஆடி அமாவாசை விழா பிரசித்தம். இங்கே சாஸ்தா சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில், பூர்ண, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிவிக்கின்றனர்.

பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை

அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமநாத அய்யனார்
அம்மன் பூரணைபுஷ்கலை
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சூரக்கோட்டை
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் விவசாயி ஒருவர் நிலத்தில் ஏர் பூட்டி வேலை செய்யும் போது, ஏர்க்கலப்பையில் கல் ஒன்று தட்டுப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார் விவசாயி, அந்தக் கல்லில் காட்சி தந்தருளியவர் அய்யனார். “இங்கே கோயில் கட்டி என்னைக் கும்பிட்டா, உங்க மொத்த ஊரையும் மக்களையும் நான் காப்பாத்தறேன்என்று அய்யனார் சுவாமி அருள, அவருக்குச் சிலை வைத்து சின்னதாகக் கோயில் கட்டி வழிபட்டனர். சுமார் 80 வருடங்களுக்கு முன்பு கேரளச் சித்தர் ஒருவர், இந்த ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வந்து, அங்கேயே சில காலம் தங்கினார். அவரைப் பிள்ளையார் கோயில் சாமியார் என்றே அழைத்தனர். பிறகு, பரமநாத அய்யனார் கோயிலுக்கு அருகில் குடிசை அமைத்துத் தங்கினார். மிளகு, கண்டந்திப்பிலி மாதிரியான பொருட்களை மண்பானையில் இட்டுக் கஷாயம் தயாரித்து, அதையே உணவாக அருந்துவார் அந்த சாமியார். அய்யனாரை தரிசிக்க வந்தவர்கள், சாமியாரையும் வணங்க அவர்களுக்கு கஷாயத்தை தீர்த்தமாகத் தருவார்.