அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44-2744 3245 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஸ்தலசயனப்பெருமாள் |
உற்சவர் | – | உலகுய்ய நின்றான் |
தாயார் | – | நிலமங்கைத் தாயார் |
தல விருட்சம் | – | புன்னை மரம் |
தீர்த்தம் | – | புண்டரீக புஷ்கரணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருக்கடல் மல்லை |
ஊர் | – | மகாபலிபுரம் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களைப் பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களைக் கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த, தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார்.
பல ஆண்டுகளாக இதை செய்தார். “பரந்தாமா. நான் கொண்ட பக்தி உண்மையானால், இந்த கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். இந்தப்பூக்கள் அதுவரை வாடாமல் இருக்கட்டும்” என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா? ஒரே இரவில் கைசோர்ந்தார். ஒரே மனதோடு இறைவனை நினைத்தபடியே நீரை இறைத்த முனிவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் பெருமாள் வந்தார். முனிவரை மேலும் சோதிக்கும் வகையில், “கடல்நீரை இறைக்கிறீரே. இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்” என்றார். “முதியவரே! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியை தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாள் அருளால், இந்தக்கடல் வற்றியே தீரும்” என்றார். மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து,”இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்” என்று கூறிச் சென்றார்.
முதியவராகிய பெருமாள், மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்து சென்ற பூக்களையெல்லாம் சூடி இந்த கடலிலேயே “ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில்” காட்சியளித்தார். இதைக்கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி,”பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையை சுமக்கச்செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்” என வேண்டினார். பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயனத் திருக்கோலத்தில் காட்சி தந்ததால் “தலசயனப்பெருமாள்” என அழைக்கப்படுகிறார்.
இது பூதத்தாழ்வார் அவதார தலம். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார். 108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான். தன் கையில் உள்ள தாமரையை மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். இத்திருக்கோயிலில் தாயார், ஆண்டாள், லக்ஷ்மிநரசிம்மர் மற்றும் ஸ்ரீராமபிரான் ஆகியோருக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்தத் திவ்ய தேசத்தில், எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் கிழக்கு நோக்கி புஜங்கசயனக்’ கோலத்துடன், சதுர்புஜத்துடன் (நான்கு திருக்கரங்கள்) காட்சித் தருகிறார்.
ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்தன. அப்போது இத்தலத்திற்கு “ஏழு கோயில் நகரம்” என்ற பெயர் இருந்தது. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில். இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது. இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, இங்கிருந்த பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். இவருக்கே தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தைத் தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாஸனம்
பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.
–திருமங்கையாழ்வார்
திருவிழா: வைகுண்ட ஏகாதசி
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். நிலம் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் நிச்சயம் வழிபட வேண்டிய தலம் இது. எம்பெருமானுக்கும், பிராட்டிக்கும் பூமியின் தொடர்புடைய பெயருள்ளது. பூமி பூஜை செய்வதற்கு முன் பக்தர்கள் இந்தத் தலத்தின் நிலமங்கைத் தாயாருக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு பூமி பூஜையை ஆரம்பித்தால் பலன் நிச்சயம். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தடைகள் ஏற்படின், இந்தத் தாயாரைப் பிரார்த்தனைச் செய்து நெய் தீபமேற்றி வழிபட்டால் வழக்குகளின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு வெற்றி உண்டாகும்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.
இருப்பிடம் : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரத்தில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை
தங்கும் வசதி : சென்னை
Leave a Reply