அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி

அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி – 612 102, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435-245 0118, 94433 96212 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன்
உற்சவர் சிருங்கார சுந்தரர்
தாயார் மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)
தல விருட்சம் செவ்வாழை
தீர்த்தம் சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்
ஆகமம் வைகானசம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பார்கவ க்ஷேத்திரம்
ஊர் திருவெள்ளியங்குடி
மாவட்டம் தமிழ்நாடு

மகாவிஷ்ணு  வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மைநிலை அறிந்த அசுரகுல குரு சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு தர்ப்பைப்புல்லால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்துப் பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளி(சுக்கிரன்)யங்குடிஎன அழைக்கப்படுகிறது.

சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுரகுல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார்.

அதற்கு பிரம்மா,”இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன்,”தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், இராமாவதார காட்சி வேண்டும்என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தைக் கருடாழ்வாரிம் கொடுத்து விட்டு கோலவில்லி இராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்கிராச்சாரியார். இதன் காரணமாகவும் இது வெள்ளியங்குடிஆயிற்று.

இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத்தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக் கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.

இத்தல பெருமாள் புஜங்க சயனத்தில்,கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்தக விமானம் எனப்படுகிறது.. சுக்கிரன், பிரம்மா, இந்திரன், பராசுரர், மயன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.

இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.

பாடியவர்கள்:

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்

ஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களையுருட்டி கார்நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார்க் கருதியகோவில் பூநிரைச் செருத்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங் குடியதுவே

திருமங்கையாழ்வார்

திருவிழா:

ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை:

கண்ணில் குறைபாடு உள்ளவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுவோர் இங்கு வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை. சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

வழிகாட்டி:

கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் பஸ்சில் சோழபுரத்தில் இறங்கி அங்கிருந்து வெள்ளியங்குடி பஸ்களில் 6 கி.மீ., பயணித்தால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து எண்2 என்ற டவுன்பஸ்சும் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஆடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி

தங்கும் வசதி : கும்பகோணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *