அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருசாளக்கிராமம்

அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருச்சாளக்கிராமம், நேப்பாளம் (சாளக்கிராமம்)

மூலவர் ஸ்ரீமூர்த்தி – (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பூ மூர்த்தி)
கண்டவர்கள் ப்ரம்மா, ருத்ரர், கண்டகி
தாயார் ஸ்ரீதேவி நாச்சியார்
விமானம் கனக விமானம்
தீர்த்தம் ஸ்ரீசக்ர தீர்த்தம்

பாடியவர்கள்:

பெரியாழ்வார் – 2பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் 10பாசுரங்கள்.

சாளக்கிராம க்ஷேத்ரம் கண்டகி நதிப்படுகையில், கணக்கிலடங்கா சாளக்கிராம சிலைகள் விளங்குகின்றன. பாக்கியமுள்ள பக்தர்கள் அங்கு சென்று சாளக்கிராம மூர்த்திகளை, தாங்களே சேகரித்து எடுத்து வருகின்றனர். பக்தர்கள் வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

அர்ச்சனை செய்யப்படும் மூர்த்திகளில்(விக்ரகம்) புனிதம் ஏற்பட முதலில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். இது மிகவும் அவசியம். ஆராதனை செய்பவர்கள் ஆசார்யர்களிடம் இதற்கான தீக்ஷை பெறவேண்டும். தீக்ஷை பெற்றவர்கள்தான் மூர்த்தியை ஆராதனை செய்யத் தகுதிபெற்றவர்கள்.

ஆனால் எம்பெருமானின் புனிதமுள்ள சாளக்கிராம மூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதனை மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனை செய்யலாம்.

சாளக்கிராம மூர்த்திகள், இமாலயத்திலிருந்து (சாளக் கிராம சிகரம்) உற்பத்தியாகும் கண்டகி நதிப்படுகையில் சக்ர தீர்த்தம் என்ற புனிதமான இடத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. இதன் அளவு சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம் வரை பெரிதாகவும், அபூர்வமான சில சாளக்கிராம மூர்த்திகளில் ஸ்வர்ணரேகையும் இருக்கும். இதனால் அந்த நதி அங்கு ஹிரண்யவதிஎன்றும் கூறப்படுகிறது.

சில சாளக்கிராம மூர்த்திகள் அபூர்வமாக, வெள்ளை, நீலம், சிகப்பு வர்ணங்கள் உள்ளதாகவும் இருக்கும். இவைகளின் மதிப்பு நிர்ணயிக்க முடியாதது. இப்படிப்பட்ட சாளக்கிராம மூர்த்திகள் தெய்வ சங்கல்பம் இருந்தால்தான் கிடைக்கும்.

இமயமலையின் தவளகிரி என்கிற சிகரமான ஸப்த கண்டகியிலிருந்து கண்டகி நதி உற்பத்தியாகிறது. திரிவேணி காட் என்கிற சமபூமியில் (இமயமலையில்) பிரவேசிக்கிறது. இந்த இடம் சாளக்கிராமம் என்ற க்ஷேத்ரத்திற்கு வெகு தொலைவில் இல்லை. இங்கு பல ரிஷி முனிவர்கள் ஆசிரமம் அமைத்து வசித்துவந்தார்கள் என்று கூறப்படுகிறது. முக்தி நாராயணனின் கோயில் சாளக்கிராமத்திற்கு தெற்கில் உள்ளது. ஆதலால் அந்த நதிக்கு சாளக்கிராமிஎன்ற பெயரும் உண்டு. (ப்ரஹ்ம வைவர்த்த புராணம்)

கண்டகி அல்லது கண்டகாவதி என்பது கண்டக்என்று அங்கு பேசப்படும் நேபாளி மொழியில் சொல்லப்படுகிறது. இந்த நதியின் ஹிரண்யவதி” (ஸ்வர்ணமயம்) என்ற பெயருக்கு, கண்டகி நதிப்படுகையில் கிடைக்கும், ஸ்வர்ண ரேகை உள்ள சாளக்கிராம சிலைகள் காரணமாக இருக்கலாம். இவைகளை விஷ்ணு சொரூபமாகப் பூஜை செய்கிறார்கள்.

நேபாள மக்கள் இதை கண்டஸ்தானம்என்கிறார்கள். இரண்டு மலைக்குன்றுகளின் பள்ளத்தாக்கிலிருந்து உற்பத்தியாவதால் இதை கண்டகி என்று வழங்குகிறார்கள். இதை விஷ்ணுவின் கோயில் என்றும் கருதுகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி இரு மலைக்குன்றுகளின் மத்தியிலிருந்து (சுமார் 15,000அடி உயரம்) உற்பத்தியாகும் கண்டகி நதியின் உற்பத்தி ஸ்தானத்தில், இலட்சுமிநாராயணன் சிலை இருக்குமென்றும், இரு குன்றுகளையும் முறையே இலட்சுமிஎன்றும் நாராயணன்என்றும் கருதுகிறார்கள். இந்த இரண்டு குன்றுகளும் தாது வர்க்கங்களுடன் கடினமானவையாயும், அவைகளின் கற்கள் மிகவும் பளபளப்பு உள்ளதாகவும் இருக்கும். எப்பொழுதும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு இருப்பதால் அதன் வடிவைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள கருப்பு நிறமுள்ள கற்கள் கூழாங்கல் மாதிரி இருக்கின்றன. பனிக்கட்டிகளாலும், மழையினாலும், உறையப்பட்டு, பின் கண்டகி நதி பிரவாகத்தின் வழியாக வெளிவருகின்றன.

வஜ்ரகீடம்என்கிற ஜந்துக்கள் சிறிய சாளக்கிராம சிலைகளில் துளையிட்டு அங்கு வசிக்குமென்று கூறுகிறார்கள். அந்த இடம் முழுதும் பனிக்கட்டியால் மூடி இருப்பதால் வஜ்ரகீடம் என்கிற ஜீவன்களை யாரும் நேரில் பார்த்ததாகத் தெரியவில்லை. தேவர்கள் வஜ்ரகீடம்என்கிற ஜந்துவாக இங்கு வாழ்கிறார்கள் என்பது ஐதீகம்.

இப்படி வெளிவரும் சில சாளக்கிராம சிலைகளில்(மூர்த்திகள்) சிலவகையில் துவாரங்கள் இருப்பதாலும், அதன் உட்புறத்திலும், வெளியிலும் சக்ரம்(சுதர்சனம்) போன்ற சில கோடுகள் இருப்ப தாலும்தான், அவைகள் புனிதமாகக் கருதப்படுகின்றன. சில சாளக்கிராம சிலைகள் துவாரங்கள் இல்லாமலும் இருக்கின்றன. இவைகளை ஹிரண்யகர்ப்பம் என்றும், சிலவற்றில் தங்க ரேகைகள் படிந்திருக்குமென்றும் கூறுகிறார்கள். தங்க ரேகைகள் படிந்த சிலைகள் மிக மதிப்பு வாய்ந்தவை. இவைகள் கிடைப்பது அரிது. (கருடபுராணம்)

முன் காலத்தை அறிந்த பல மகான்கள், இவைகளில்(சாளக்கிராம சிலை) மகாவிஷ்ணு நித்யவாசம் செய்வதாகக் கூறுகிறார்கள். மேலும் சாளக்கிராம சிலைகளை ஆராதனை செய்வதால் சகல சௌபாக்கியங்களும் நற்பலன்களும் கிடைப்பதாக நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சில சாளக்கிராம சிலைகள் மிகப்பெரியதாகவும், இருக்குமென்று கூறப்படுகிறது. இவைகள் கிடைப்பது மிகவும் அரிது. தற்சமயம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

பத்ரீநாத், ஸ்ரீமுஷ்ணம், குருவாயூர் மேலும் இதர சில கோயில்களில் எழுந்தருளி சேவை சாதிக்கும் மூல விக்ரகங்கள் சாளக்கிராம சிலையினால் ஆனவை என்று கூறப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.

கண்டகிஎன்ற பக்தை புரிந்த கடினமான தவத்தால் பகவான் மகிழ்ந்து, தரிசனம் அளித்த சமயம், தான் மகாவிஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும், தாயாக இருக்கவேண்டு மென்று கேட்ட வரத்தின் பயனாக, பகவான் அந்த பக்தையை கண்டகிநதியாக, அனுக்கிரகித்து, அதில் தான் சாளக்கிராம மூர்த்தியாகத் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சாளக்கிராம க்ஷேத்ரத்தில் விசுவாமித்ரரின் புத்திரன் சாளங்காயனர்என்ற ரிஷி கண்டகி நதிக்கரையில், விசாலமாக ஓங்கி வளர்ந்த ஒரு சாலமரத்தடியில் அமர்ந்து விஷ்ணுவைக் குறித்து தவம் புரிந்தார் என்றும், அங்கு பகவான் மஹாவிஷ்ணு அவருக்கு தரிசனம் அளித்து அனுக்கிரகித்த அந்த இடமும், அதைச் சார்ந்த மலைக்குன்றுகளும், புனிதமானது என்றும், அங்கு அவர் நித்யவாசம் செய்வதாகவும் கூறப்படுகிறது. அது முதல் அந்த பிரதேசம் சாளக்கிராமசேத்திரமென்றும், அந்த மலைச் சாரல் சாளக்கிராம கிரி(மலை) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள கண்டகி நதியும் புனிதமாக கருதப்படுகிறது(வராஹ புராணம்). அங்கு சாலமரங்கள் அடர்ந்திருந்ததால், சாளக்கிராமம் என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்திய தேசத்தில் பரவலாக உள்ள 108ஸ்ரீவைஷ்ணவ திவ்ய க்ஷேத்ரங்களில் சாளக்கிராமம் விசேஷமுள்ளதாக விளங்குகிறது. சாளக்கிராம க்ஷேத்ரம் 8 “ஸ்வயம் வ்யக்த” க்ஷேத்ரங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் (8)

1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி (திருமலை)

4. நைமிசாரண்யம் 5. தோத்தாத்ரி (வானமாமாலை) 6. புஷ்கரம் 7. பத்ரிநாத், 8. சாளக்கிராமம்.

சாளக்கிராம திவ்யதேசம் நேபாள ராஜ்யத்தின் தலைநகரம் காட்மாண்டு நகரிலிருந்து 272கி.மீ. தொலைவில் இமாலய மலைத் தொடரின் அன்னபூர்ணாமலைத் தொடருக்கு அப்பால் தௌளத்கிரியில் சிகரத்தில் (உயரம் 3,710மீ) உள்ளது. இந்த இடம் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத கடுங்குளிர் பிரதேசமாகும். இங்கு செல்லும் யாத்ரீகர்களின் வசதிக்காக, இந்த உயர்ந்த மலைப்பிரதேசத்தில் இந் நாட்களில் சிறிய அளவில், பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாளக்கிராம யாத்திரையின் கடைசி கட்டத்தில் பாத யாத்திரையாகவோ அல்லது போனி (குதிரை) சவாரி மூலமாகவோ, பயணிகள் செல்ல வேண்டி இருக்கிறது. சாளக்கிராமம் முக்தி நாத்/முக்தி நாராயணன் இரண்டும் ஒரே க்ஷேத்ரமென்று கருதப்படுகிறது.

சாளக்கிராம க்ஷேத்ரம் என்ற பெயர் நேபாள நாட்டில் அதிக பழக்கத்தில் இல்லை. அங்கு சாதாரண மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். முக்திநாத் / முக்தி நாராயணன் என்ற பெயர்தான் அங்கு வழங்கப்படுகிறது. அங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும் பகவான் முக்திநாத் / முக்தி நாராயணன் என்று வணங்கப்படுகிறார். இங்கு நம்மிடை கூறப்படும் ஸ்ரீமூர்த்தி ஸ்ரீதேவி நாச்சியார் என்ற பெயரும் அங்கு மக்களிடை வழக்கத்தில் இல்லை.

சிலர் கண்டகி நதிக்கரையில், காட்மாண்டுவிலிருந்து 104கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தாமோதர குண்டம்என்ற இடத்தை சாளக்கிராமம் என்று கூறுகிறார்கள். அங்கு சாலமரங்கள் நிறைந்து இருந்ததால் சாளக்கிராமம்என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் முக்திநாத் கோயில் பக்கத்தில் மட்டும் சில சாலமரங்கள் உள்ளன.

பௌத்தர்கள் இதை திபேத் மொழியில் மோட்சமளிக்கும் பள்ளத் தாக்குஎன்று அழைக்கிறார்கள். சாளக்கிராமம் (முக்திநாத்) யாத்திரை செல்ல அனுகூலமான சமயம். ஏப்ரல் 10தேதிக்கு மேல் மே மாதம் மூன்றாம் வாரம்வரை. மேலும் அக்டோபர் இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம்வரை (மே மாதக் கடைசியில் மழை ஆரம்பமாகிவிடும்).

நவம்பர் முதல் இரண்டாவது வாரத்திலிருந்து மார்ச் மாதம் வரை இங்கு கடும் பனிமழை, மேலும் கடுங்குளிர் இருக்கும் ஆதலால் நம்மால் யாத்திரை செய்ய இயலாது.

கோவிலில் பூஜாகாலம் / தரிசனம் :

காலை 6மணி முதல் 9மணிவரை,

மாலை 4மணிமுதல் 6மணிவரை, மாலை 6மணிக்கு நீராஜனம் (ஆரத்தி) சேவிக்கலாம்.

இங்கு நன்கு குனிந்து வணங்கி பெருமாள் திருவடிகளை நெற்றியில் ஒத்திக் கொள்ளலாம். இந்த திவ்ய சேவைக்காக எவ்வளவு சிரமப்பட்டாலும் தகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *